பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224
சாயங்கால மேகங்கள்
 

"ஏற்கெனவே கவலைப்பட உங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும்போது நான் புதிதாக இதையும் சொல்லித் தான் ஆகணுமா?”

“என்ன தான் சொல்லிச் சண்டை பிடித்தாள்?”

“நீங்கள் இப்படி எல்லாம் அலைவதால் கடை, வியாபாரம் எல்லாம் கெடுகிறதென்று வருத்தப்பட்டாள். அதுகூடப் பரவாயில்லை... ஆனால்........” என்று சொல்லிக் கொண்டே வந்த சித்ராவின் வார்த்தைகள் உடைந்து சிதறி மெல்லிய துயர் விசும்பலாக மாறியது.

பூமி கேட்டான்:

“பெண்களின் மனஉறுதி என்பது இவ்வளவுதான் போலிருக்கிறது.”

“சிலவற்றைத்தான் பொறுத்துக் கொள்ளலாம். கண்டபடி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது.”

“அப்படி என்னதான் பேசினாள்?”

“இன்னும் என்னதான் பேசணும்?”

“விஷயத்தைச் சொன்னால்தான் புரியும்?”

“நீங்களும் நானும் பழகறதைப் பத்தி ஊரே சிரிக்கிறதாம்.”

“யார்? முத்தக்காளா அப்படிச் சொன்னாள்”

“ஆமாம்! நேற்று இதை அவங்க என்கிட்டச் சொல்றதுக்கு அவசியம் இல்லே....... ஆனாச் சொன்னாங்க...”

“நம்ம மனசிலே கால்மிஷம் இல்லாதப்ப யார் என்ன சொன்னாலும் வருத்தப்பட வேண்டியதில்லையே”

அவனுடைய இந்தப் பதிலில் இருந்த பொதுத் தன்மையை அவள் இரசித்ததாகத் தோன்றவில்லை. அவள் மெளனமாகப் பூத்தொடுத்தபடி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.