பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சாயங்கால மேகங்கள்

சித்ரா முத்தக்காளைப் பற்றி தன் கணிப்புக்களையும் அநுமானங்களையும் தயங்காமல் அவனிடம் எடுத்துக் கூறினாள்.

“அந்த அம்மாளுக்குத் தன்னோடு பழகுகிறவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியவில்லை. நீங்களோ நானோ அவர்களுடைய வரவு செலவுகளையும் லாப நஷ்டங்களையும் மட்டுமே கவனித்துக் கொண்டு மற்றவை எதையும் கவனிக்காமல் இருக்க வேண்டும். மற்றவற்றையோ, மற்றவர்களையோ கவனித்தாலே அவர்கள் தன்னையும் தன்னுடைய நலன்களையும் கவனிக்காமல் இருக்கத் தொடங்கி விட்டார்களோ என்ற சந்தேகமும் பயமும் அந்த அம்மாளுக்கு வந்து விடுகிறது. இப்படிப்பட்டவர்களோடு தொடர்ந்து பழகுவதே சிரமமான காரியம்! நீங்கள் எப்படித்தான் தொடர்ந்து பழகுகிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.”

இந்தக் கணிப்பைக் கேட்டுப் பூமி வியப்படைந்தான், அப்படியே முத்தக்காளின் குணசித்திரத்தைக் கச்சிதமாக வரைந்துக் காட்டியிருந்தாள் சித்ரா. அவள் முத்தக்காளைப் பற்றிக் கூறியதில் ஒருவார்த்தை கூட மிகையில்லை என்பது அவனுக்கே நன்கு புரிந்தது.. ஆனாலும் அப்போதும்கூட முத்தக்காளை விட்டுக் கொடுக்காமல்தான் சித்ராவுக்கு மறு மொழி கூறினான் அவன்.

“புரிகிறது! ஆனாலும் வேறு வழியில்லை. இந்த அம்மாளையும், இந்த உணவு விடுதியையும் இலக்காக வைத்து நாம் விரோதித்துக்கொள்ள நேர்ந்துவிட்ட சமூக விரோதச் சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போரிடுவதென்று நான் முடிவு செய்து விட்டேன்.”

“நீங்கள் முடிவு செய்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவோ பொருட்படுத்தவோ, தயாராயில்லை, வியாபாரத்தில் லாபம் கிடைப்பதாயிருந்தால் சமூக விரோத சக்திகளோடு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ள அவர்கள் தயாராயிருக்கிறார்கள். நமக்கும் முத்தக்காளுக்கும் இந்த அடிப்படை வித்தியாசம் இருக்கிறது."