உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

239

சரணாகதி அடைந்து பிடிபடுவதை விட ஓடித் தப்பி விடுவது மேல் என்ற எண்ணத்தில் டில்லி பாபு பூமியிடமிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். அவனிடமிருந்து விவரம் அறிவதற்காக வந்திருந்த பூமியும் விடாமல் அவனைத் துரத்த வேண்டி யிருந்தது. பூமி மேலும் தன்னை உதைப்பதற்காகத்தான் துரத்துகிறான் என்று நினைத்துக்கொண்டு டில்லிபாபு ஓட, அவனைப் பிடித்து அவனிடம் விவரம் விசாரிக்காவிட்டால் தேடி வந்ததே வீணாகிவிடும் என்ற எண்ணத்தில் பூமி துரத்த, ஓர் ஓட்டப் பந்தயமே நடந்தது. கடைசியாக பூமி டில்லியைப் பிடித்து விட்டான். டில்லியை நன்றாக உதைத்த பின் மெல்ல ஒரு நுனி பிடிபட்டது.

மோட்டார் சைக்கிளில் பெண்களைத் துரத்தி செயின், வளைகளைத் திருடிக் கொண்டு ஓடுவது, வீடுகளில் புகுந்து திருடுவது, பஸ்கள், ரயில்கள், சினிமாக் கூட்டங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் பிக்பாக்கெட் அடிப்பது இந்த வேலைகளுக்கான இளைஞர்கள் கூட்டம் ஒன்றை மன்னாரு தயாரித்து வைத்திருக்கிறான் என்றும், அதன் தலைமை அலுவலகம் எண்ணூருக்கு அப்பால் கடலில் சிறிது தொலைவு உள்ளே போனால் ஏறக்குறையத் தீவு போல அமைந்த குக்கிராமம் ஒன்றில் இருக்கிறது என்றும் டில்லி பாபு கூறினான்.

இந்தத் தகவல்களை தன்னிடமிருந்து தெரிந்து கொண்டதாக யாரிடமும் மூச்சு விடக் கூடாதென்று பூமியிடம் சத்தியம் பண்ணச் சொல்லி மன்றாடினான் டில்லி. இந்தத் திருடும் கூட்டத்தில் தானும் இருந்ததாகவும் இதற்காக பல ஆட்களைத் தானே மன்னாருவிடம் சேர்த்து விட்டிருப்பதாகவும், அப்படித் தன்னால் சேர்த்து விடப்பட்டுத்தான் இப்போது காணாமல் போயிருக்கும் மைலாப்பூர்ப் பையனும் மன்னாருவிடம் இணைந்தான் என்றும் டில்லி மேலும் தகவல் தெரிவித்தான்.

பூமிக்கும் சித்ராவுக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்து உபசரித்தான் டில்லி. இரண்டு இளநீருக்கும் எவ்வளவு பணம் என்று கேட்டு டில்லி எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்காமல் உடனே பணம் கொடுத்து விட்டான் பூமி.