உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சாயங்கால மேகங்கள்

அவன் பார்வையைக் கவனித்த சித்ரா “எங்கப்பாவின் படம்” என்று அவனுக்கு விளக்கினாள். பரமசிவம் ஞாபகமாகப் பழைய பேச்சைத் தொடர்ந்தான்.

“லஞ்சம் கொடுப்பவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். வாங்குகிறவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காக வாங்கியதாகவே சொல்கிறார்கள்; தொடர்ந்து அது ஒரு விஷ வட்டமாகவே இருந்து வருகிறது.”

“சம்பளப் பணத்தில் வற்புறுத்திப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். நாங்கள் விரும்பிக் கொடுப்பதாக அர்த்தம் இல்லை.”

என்று தங்கள் அநாதரவான நிலையை விளக்கினாள் சித்ராவின் தோழி. பூமி அவர்களுக்கு ஒரு யோசனை சொன்னான்.

“ஆறுபேர் ஒன்று சேர்ந்தாலே ஒரு யூனியன் ஆரம்பிக்கலாம். நகரிலுள்ள எல்லா நர்ஸரி பள்ளிகளின் ஆசிரியர்களையும் இந்த மனக்குறைகளை அடிப்படையாக வைத்து ஒன்று திரட்டினால் சில காரியங்களைச் சாதிக்க முடியும்.”

பூமியின் இந்த யோசனையைச் சித்ரா வரவேற்றுப் பாராட்டினாள். சித்ராவின் தோழி தயக்கம் காட்டினாள்.

“ரொம்பப் பேர் யூனியன்னு சொன்னாலே பயந்து ஒதுங்கிட”

“ஒதுங்கினால் பயனில்லை. ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக ஒன்று சேர வேண்டும். அல்லது ஒரே விதமான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும். இரண்டாவது வகையினரின் ஒற்றுமை இங்கே ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. நர்சரி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் முன்பே பதிவாகிவிட்டது.”