புரட்சியையும் சமூக மாறுதலையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்கு வாதியைவிட அதைப்பற்றி அரைகுறையாகவும் மேலோட்டமாகவும் மட்டுமே தெரிந்த நடுத்தர வர்க்கத்து முற்போக்கு வாதியே மிகவும் அபாயகரமானவன்
அளவுக்கு அதிகமான கருத்து ஒற்றுமையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவுக்கு அதிகமான கருத்து வேற்று மையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவான கருத்து ஒற்றுமைகளும் அளவான கருத்து வேற்றுமைகளும் சேர்ந்துதான் ஒரு நல்ல சிநேகிதத்தை வளர்க்க முடியும் என்பது பூமியின் கருத்து.
அப்போது அவனுக்கும் சித்ராவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் இடைவெளியோடு கூடிய நெருக்கமாகத்தான் இருந்ததே ஒழிய இடைவெளியற்ற நெருக்கமாக இல்லை. இடைவெளியற்ற நெருக்கத்தில் எதுவுமே வளரமுடியாதென்ற அநுபவ உண்மை பூமிக்கு வாழ்வில் பலமுறை புரிந்திருந்தது. இந்த நெருக்கம் வளர இடம் விட்டு ஏற்பட்டிருக்கிறது என்பதே ஒரு நல்ல முன்னடையாளமாக இருந்தது.
அப்பர்சாமி கோயில் தெருவில் நாலைந்து குடித்தனங்கள் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் ஒரு போர்ஷன் கிடைத்தது. ஒரு சமையலறை; அதற்குள் நுழைவதற்கு முன் பகுதியாக ஒரு சிறிய கூடம், இவ்வளவுதான் அந்த போர்ஷன்.