சித்ராவும் அவளுடைய தோழி தேவகியும் புறப்பட்டுப் போன பின்பும் நெடுநேரம் வரை பூமி அவர்களைப் பற்றிய நினைவில் திளைத்திருந்தான்.
கீரீன் ரூமைத் தேடி வந்து ஆர்வம் குன்றாமல் வேறு பலரும் பூமியைப் பாராட்டினார்கள். சிங்கப்பூரில் புக்கிட்டிமா சாலையில் உள்ள சென் யீ செல்ஃப் டிஃபன்ஸ் ஸ்கூலையும் அதன் மாஸ்டரான சென்யீயையும் நன்றியோடு நினைவு கூர்ந்தான் அவன். சீனரான சென்யீ கராத்தே, ஜூடோ, குங்ஃபூ மூன்றிலும் மகா நிபுணர். அவரது சைனீஸ் ஸ்டைலில் வேகமும் பாய்ச்சலும் அதிகம், துரிதகதியான அந்த முறையில் பூமியை உருவாக்கியவர் சென்யீ மாஸ்டர் தான்.
வீட்டுச் சுவரிலே மாட்டித் தன் பெற்றோர் படங்களைப் பயபக்தியோடு வழிபட்டு வந்ததைப் போல் சென்யீ மாஸ்டரின் படத்தையும் வழிபட்டு வந்தான் பூமி. உடம்பு நன்றாக வளைகிற இளமையிலேயே இந்த தற்காப்புக் கலைகளை அவனுக்கும் பல இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுத்த பெருமை சென்யீ மாஸ்டருடையது.
அன்று அவர் தனக்குக் கற்பித்த அதே ஆர்வம் குன்றாத உற்சாகத்தோடு: இன்று வேறு. பல இளைஞர்களுக்குப் பூமி அந்தக் கலையைக் கற்பித்து வளர்த்து வந்தான்.
அன்று பாலாஜி நகர்பள்ளி விழாவில் கராத்தே நிகழ்ச்சி நடந்தபின். மேலும் பல புதிய இளைஞர்கள் தங்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு பூமியைத் தேடி வந்தார்கள். கராத்தே, குங்ஃபூ பற்றி வெளிவந்திருந்த இரண்டோர் ஆங்கிலத் திரைப் படங்கள் வேறு இளைஞர்களிடையே அவற்றைக் கற்கும் மோகத்தை அதிகமாக்கியிருந்தன.
நடுவில் ஒருநாள் காலை பள்ளிக்குப் போவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தபோது சித்ராவை மீண்டும் சந்தித்தான் பூமி.