உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சுளையாக ஆறு மாத அட்வான்ஸ் வாங்கிய பின்னும் வெள்ளையடித்து துப்புரவு செய்து போனது வந்ததைச் சரிபார்த்து ஒழுங்கு பண்ணிக் குடுக்க முடியாதுங்கறார் வீட்டுச் சொந்தக்காரர்” -- என்று அப்பர் சுவாமி கோயில் தெரு வீட்டு உரிமையாளரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள் சித்ரா. தான் அவளுடைய சார்பில் அந்த வீட்டு உரிமையாளரைத் தேடிச் சந்தித்து வற்புறுத்துவதாக சித்ராவுக்கு வாக்களித்தான். பூமி. அடுத்த நாள் காலையிலேயே அப்பர் சுவாமி கோயில் வீட்டு உரிமையாளரைப் பார்த்து அதை வற்புறுத்திச் சொல்லியும் விட்டான். அவரும் ஏறக்குறைய அவனுடைய கோரிக்கைக்குச் சம்மதித்த மாதிரியே பதில் சொல்லியிருந்தார். அடுத்த நாள் மாலை அருள்மேரி கான்வெண்ட் பள்ளி விடுகிற நேரத்துக்குப் பூமியே ஆட்டோவில் அவளைத் தேடிச் சென்றான். வீட்டுக்காரர் வெள்ளையடிப்பதோடு போனது வந்ததைச் சரிசெய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் அதைக் கேட்டு அவள் மகிழ்ச்சி அடையக் கூடும்.

அவள் பள்ளி முடிந்து வெளியே வர ஐந்து மணியாயிற்று. எதிர்பாராத விதமாக பூமி தனக்காகக் காத்திருக்கக் கண்டதும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். பூமியின் அருகில் வந்ததும் “சவாரியை விட்டு விட்டு எப்பொழுது பார்த்தாலும் இங்கே என்னைத் தேடிக் கொண்டு வந்தீர்களானால் தொழில் என்ன ஆவது?” -- என்று கடிந்து கொள்கிறாற் போன்ற செல்லமான தொனியில் விசாரித்தாள் சித்ரா. பூமி புன்னகையோடு அதற்கு மறுமொழி தயாராக வைத்திருந்தான்.

“இன்றைக்கு காலை ஒரு மணிக்குள்ளேயே நல்ல சவாரி! போதுமான வசூலும் ஆகிவிட்டது. இப்பொழுதே வண்டியை மடக்கி நிறுத்தி விடலாம்.”

“உங்கள் அதிர்ஷ்டம் அப்படி! என் துரதிர்ஷ்டம் முழுச் சம்பளத்துக்குக் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பாதிச் சம்பளம் மட்டுமே கையில் வாங்குகிற சம்பள நாள் இன்றைக்கு.”