பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சாயங்கால மேகங்கள்

"நான் தான் அன்றைக்கே சொன்னேனே, நர்சரி கான்வெண்ட் பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைவரும் சேர்ந்து ஒரு வலுவான யூனியன் அமையுங்கள் என்று; இந்தக் காலத்தில் தீமைகளுக்கு எதிரான அணியமைத்து ஒன்று படுவதன் மூலம்தான் தீமைகளை ஒழிக்க முடியும்...”

“அது அவ்வளவு சுலபமில்லை! எல்லாருமே வேலைக்குப் பயந்தவர்கள. யூனியன் அது இது என்று இறங்கி இருக்கிற வேலையும் போய் விட்டால் என்ன செய்வதென்று நழுவுகிற சுபாவம்தான் அதிகம். நாங்களாவது அரைச் சம்பளம் வாங்கிக் கொண்டு முழுச் சம்பளத்துக்குக் கையெழுத்துப் போடுகிறோம். வெளியே வேலை தேடித் தவித்துக் கொண்டிருக்கும் புதியவர்கள் ‘கால் சம்பளம் தந்தாலே போதும், முழுச்சம்பளத்துக்கும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம்’ என்கிற அளவுக்கு மோசமாகியிருக்கிறார்கள்.”

“இங்கேயே நின்று பேசிக் கொண்டிருப்பானேன்? போகலாமே?”

“எங்கே போவது?”

“எங்கே வேண்டுமானாலும் போகலாம்” என்று கையைக் காட்டி அவளை ஆட்டோவில் ஏறிக்கொள்ளச் சொன்னான் பூமி.

“மீட்டர் போட்ட. சவாரியா? சும்மாவா? அது தெரிந்த பின்புதான் ஏற வேண்டும்.” இப்படி கேட்டுவிட்டுச் சிரித்தாள் சித்ரா.

“பழகியவர்களைப் பார்த்தால் இதில் மீட்டர் வேலை செய்யாது.”

“கோளாறா? பழக்க தோஷமா?”

“பழக்க தோஷத்தினால் வந்த கோளாறு என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்--”