பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

7


கிறான், நம்மை ஏமாளிகள் என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறான். கோடிக்கணக்கான மக்களைத் தன் கோமாளித் தனத்தால் குல்லாப் போட நினைக்கின்றான், எண்ணெயுமில்லை, திரியுமில்லை, எப்படி எரியும்? அப்படியே ஒவ்வொரு விளக்காக ஏற்றுவதானாலும், இங்கே மாட்டப்பட்டிருக்கும் இத்தனை லட்சம் விளக்குகளைக் கொளுத்த எத்தனை மாதங்களாகும்? ஏதோ புரளி, நாங்கள் நம்பவில்லை" என்கின்றான். "இருக்கும், இருக்கும், மக்களை ஏமாற்றி ஏமாற்றி நன்றாகப் பயிற்சி பெற்று விட்டார்கள். இதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்கிறான் இன்னொரு சந்தேகி. "ஊம், இப்படியே சொல்லிக் கொண்டிருந்து இருட்டானவுடன் எல்லாப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு எந்தப் பக்கமாகிலும் ஓடிவிடத் திட்டமிடுவான் இந்தக் கண்காட்சித் கலைவன்" என்கிறான் மற்றொரு சந்தேகத்தின் மாற்றாந்தாய் மகன். இப்படிப் பேசுகின்றனர் மக்கள். இதற்குள் இருட்டும் நெருங்கிவிட்டது. மக்களுக்குள் மனக்குழப்பம் அதிகமாய் விட்டது. கையெழுத்து மறைந்து, கைரேகை பறைந்து, எதிரில் வரும் ஆள் மறைந்து, எல்லாம் மறைந்து, தன் குழந்தைகளைப் பெற்றோர்கள் கையில் பிடித்துக்கொண்டு நடக்கும் நிலைக்குப் பயங்கர இருட்டு சிட்னி கண்காட்சியின் மேல் படையெடுத்து விட்டது. எங்கேயோ இரண்டோர் மெழுகுவத்திகளை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.