பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

25


“பயம் என்பது அறியாமையிலும், சலனபுத்தியாலும் உண்டாகிறது” என்ற ராபின்சன் மொழிக்கொப்பத் தன்னை எல்லாவகையாலும் தகுதியாகிக்கொண்டான் மாஜினி. இவ்வளவு சிந்தனைக்குப் பிறகு, அடிவானம் மின்னி அதிர்வதுபோல் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே அதிர்ச்சி தோன்றும். வானத்தை நோக்கி ஓடும் வானக் குழாய் போல், அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பும் ஒரு பெரு மூச்சு, அதுவே ஒரு விஷப்புகையானால், காம வெறி பிடித்து வேற்றரசர்களுக்கு அரியாசனம் அளித்து, வெட்கமில்லாமல் வெண்சாமரம் வீசும் ரோம ஏகாதிபத்தியம் வெந்தழியாதா என்று நினைக்கவும் செய்வான்

கொந்தளிப்பிற்குப் பின்னால் அமைதியடையும் கடல்போல், தன் நெஞ்சில் குமுறிய எண்ணங்களுக்குப்பின் மாஜினி சற்று நேரம் அமைதி கொள்வான். ஆனால் புரட்சிப் புகை அவன் உள்ளத்தைக் கவ்விக்கொண்டிருந்தது. உலகானுபவம் பெறாத பள்ளிச்சிறுவனாயிருந்தபோதே நாட்டின் நிலைமையை எண்ணி நலிந்தான். நள்ளிரவில் கொள்ளையடிக்கும் நயவஞ்சகர்களைப் போல் பகலில் படாடோபத்தின் மூலம் பகற்கொள்ளையடித்து, பரமனின் நாமாவளியே பாடமன்னிப்பென ஏமாற்றிய எத்தர்களிடையே தான் பிறக்க நேர்ந்ததை எண்ணி உள்ளம் உடைந்தான். உடைந்த உள்ளத்தின் அறிகுறியாக ஏதாவதொரு சின்னத்தை அணிய எண்ணினான்.