பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

129


கண்களுக்கு மானசீகமாக லகான் போட்டு, குதிரை மாதிரி எதையும் பார்க்காமல் சூனியத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டாள். அந்தக் காரை, முதலில் நகர்த்தி, பிறகு நடத்தி தெரு முனையில் நிறுத்தி, பின்னர் பிரதானச் சாலையில் திருப்பி, வண்டியை சீராக ஒட்டியபடியே, ராமசாமி சாவகாசமாகக் கேட்டான்.

'அய்யாவும் தம்பியும் டில்லியிலிருந்து வரப் போறதாய் சொன்னீங்களே. எப்போம்மா வாராங்க'.

'இதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?... அப்புறம் இன்னொரு விஷயம் - நாளையிலேருந்து யூனிபார்ம் இல்லாம ஆபீஸ் வரப்படாது'.

ராமசாமி, தன்னையறியாமலே இருக்கையில் இருந்து அரையடி மேலே போனான். இதனால் தாறுமாறாக ஓடி, அந்தக் கார் பாதசாரிகளை நெருங்கி விட்டது. எப்படியோ அதை சரியாக்கிவிட்டு, வர்த்தினியைப் பார்த்தான். இன்னும் இளமை போகாத வயதுதான். ஆனாலும் அந்த இளமையை, தாய்மையால் சுமப்பது போன்ற தோரணைக்கார அம்மா. வட்ட வடிவமான முகத்தின் பின்தளத்தில், அதற்கு முரண்பாட்டு எழிலைக் கொடுக்கும் நீள வாக்கிலான மோவாய். அது உயரும் போதும், தாழும்போதும் கருணையை உருவகப் படுத்திக் கொள்ளலாம். எதையும் தலையாட்டிக் கேட்கும் லாகவம். பேசும் போது சம்பந்தப்பட்டவரை நேருக்கு நேராய் பார்க்கும் புன்னகை முகம். ஆனால் இப்போதோ அபயம் அளிக்கும் அந்த முகம், அபாயகரமாய் தோன்றியது. கழுத்தில் ஏன் அத்தனை நரம்புகளும் புடைத்து நிற்கின்றன. உள் முகமாய் செல்லும் உதடுகள் இப்போது ஏன் துருத்தி நிற்கின்றன? ஒருவேளை குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் அம்மா மென்டலாகி இருப்பாங்களோ -- அம்மாக்கிட்டேயே பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்

'காரை சர்வீஸுக்கு விடணும் அம்மா'.

'எது பேசணுமுன்னாலும் ஆபிஸுல வந்து பேசு.'

பெண் கான்ஸ்டபிள் மாதிரி பேசிய வர்த்தினியைப் பார்த்து ராமசாமி பயந்து விட்டான். அவள் மேடமானதால், இவனும் டிரைவர் ஆகி விட்டான். அந்த வண்டிகூட இந்த மாற்றத்தை அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தது.