பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

137


தாண்டிப்போன மங்கையர்கரசிக்கு, அதிலும் ஓரிரு ஆண்டுகள் விலக்குக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அதிலிருந்து இந்த ராமலிங்கத்தை தனியாக படுக்கவிடுவதே இல்லை.

ராமலிங்கம், அவசர அவசரமாய், பல் தேய்த்து விட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே திரும்பி உட்கார்ந்து, அனிச்சையாய் குடைசாய்ந்த கைகளை வெறுமையாய் வீசிப் போட்டார். அந்தக் ககைகள் சாய்வதற்கு, நீலாவின் குழந்தைகள் இல்லை. செவ்வரளி மொட்டுக்களாய் அவரது தோளுக்கு ஒன்றாய் தலைபோட்டு கங்காரு மாதிரி தலையாட்டும் பிள்ளைகள். அவரை தாத்தாவகாமலேயே தாத்தாவாக்கியப் பிள்ளைகள்.

ராமலிங்கம், மலரும் நினைவுகளை கருக்கிக் கொண்டிருந்தபோது, திரைமறைவில் உள்ள சாப்பாட்டு மேஜையில் பல தடவை டொக்குச் சத்தங்கள்... இவர் சாய்ந்து பார்த்தால், மங்கையர்கரசி, அவரை கூப்பிடா மலேயே வாழையிலையில் பறிமாறியபடியே தன் பாட்டுக்குச் சொல்வதுபோல் சொன்னாள்.

'எதையுமே நினைத்துப் பார்க்கணும்... வீடு... ஆபிஸ் இல்ல.... குடித்தனக்கார்ங்க... சபார்டினேட்டும் இல்ல... அதோட, அந்தப் பாவிப்பொண்ணு, குடித்தனக்காரி மாதிரியா நடந்துக்கிட்டாள்?. கோயம்பத்துர்ல பெத்தவங்க, தங்களோட வந்து இருக்கும்படி கடந்த ஆறுமாசமா வற்புறுத்துனாங்களாம். இவள்தான் 'எங்க அப்பாம்மா, மெட்ராஸ்ல இருக்காங்கன்னு' சொன்னாளாம். அப்படிப்பட்ட பொண்ண, துரத்தியாச்சு.... இனி இந்த வீட்டுல என்னைத் துரத்த வேண்டியதுதான் பாக்கி....'

வாழையிலையில் குவியலாய்ப் போட்ட அரிசிச் சோற்றை சமப்படுத்தியபடியே, மங்கையர்கரசி, பேசிக்கொண்டே போனாள். போயும் போயும் ஒரு நாய்தானர் எதிரி என்று ஒரு கேள்வியைப் போட்டு, அதற்குப் பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு நாய்க்குரிய நல்ல குணங்களையும், மனிதனுக்கு குறிப்பாக இந்த ராமலிங்கத்திற்கு உள்ள கெட்ட குணங்களையும் ஒப்பிட்டுக் கொண்டே போனாள்.