பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

141


என்பதும் புரிந்தது. இரவுநேரக் களியாட்டத்தின் பகல் நேரச் சாட்சிள். இது, ஐந்தாறு குட்டிகளையாவது போடும். அந்த ஐந்தாறுக்கும் இந்த நீலா ஸ்வீட்டி, ராமு, ராணி, ஜானி, மோனி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வாள். பெயரிட்டவள் என்பதற்காக அந்த நாய்க் குட்டிகளுக்கும் உண்டி கொடுத்து உயிர்கொடுப்பாள். மாநகராட்சி நாய் வண்டியின் உபயத்தால், இந்தத் தெரு, இந்த நாய் வருவதற்கு முன்பு வரை துப்புரவாக இருந்தது. இது குட்டிகளைப் போட்டுவிட்டால், இந்த இரண்டாவது கிராஸை, நாய்தெரு என்றே கூப்பிடப் போகிறார்கள்.

ராமலிங்கத்திற்கு தெருப் பக்தி தீவிரமானது. அந்த நாய் அளவிற்கு சிறிது குனிந்து போப்போ என்றார். அது கண்டு கொள்ளவில்லை. அவரைக் கண்டவுடன் மரியாதையோடு விலகிக்கொள்ளும் அந்த நாய், 'நீ என்னடா சொல்வது' என்பது போல் ஒரு தடவை அவரை அலட்சியமாகப் பார்த்து விட்டு, மறுதடவை, நீலாவை பார்த்து வாலை ஆட்டியது. இது, ராமலிங்கத்திற்கு அவமானமாகப்பட்டது. அவரை சினக்க வைத்தது. உடனே, குடைக்கம்பால் அதன் தலையை ஒரு தட்டுத் தட்டினார். கழுத்தில் ஒரு இடி இடித்தார். அவ்வளவுதான்.... அந்த நாய் சரணடைந்ததது போல், வாலை பின்னங் கால்களுக்கு இடையே சொருகிக் கொண்டு, வலி தாங்க முடியாமல், சுற்றிசுற்றி வந்தது. ராமலிங்கம் வெற்றிப் பெருமிதத்தில், அதன் காலில் ஒரு தட்டுத்தட்டினார். அந்த நாய் நொண்டியடித்து நீலாவை அனுதாபம் தேடிப்பார்த்துவிட்டு, சுற்றுச் சுவரில் தாவப் போனது. இயலாது போகவே லேசாய்த் திறந்திருந்த இரும்புக் கிராதிக் கதவை தள்ளியபடியே ஓடியது.

நீலாவிடமிருந்து, வார்த்தைகள் சிவந்து விழுந்தன.

'என்னப்பா நீங்க..... இடுவார் பிச்சையை கெடுவார் கெடுப்பார் மாதிரி.... ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி அடிச்சிட்டிங்களே. அது கோபத்தில கடிச்சா என்ன செய்வீங்களாம்?'

'போகிற போக்கைப் பார்த்தால், நீயே நாயை ஏவி, என்னை கடிக்க செய்வ போலிருக்குகே'

'ஏன் கோபம் கோபமாக பேசுறீங்க',