பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

திருப்பம்


'நான் கெடுவார் இல்ல. லேன்ட் லார்டு... இந்த வீட்டோட ஒனர்... சில கட்டுப்பாடுகளை விதிக்க, எனக்கு உரிமை உண்டு'.

'அப்படிங்களா சார்.... ஒரு பதினைந்து நாள் டைம் கொடுங்க. நானே வீட்டைக் காலிசெய்து விடுவேன். எனக்கும் சுயமரியாதை இருக்குது.

'அவரவர் இஷ்டம்'

ஆக்குவதற்கு வருடங்கள், அழிப்பதற்கு நிமிடங்கள் என்பது கண் முன்னாலேயே நிகழ்ந்து விட்டது. அச்சாணி கழன்ற தேர்போல அப்பா - மகள் உறவு, ஒரு சின்ன விவகாரத்தில் சிதைந்து போனது. ஐந்து நிமிடங்களிலேயே, அன்னியோனியமாய் பழகிய இருவரும் அந்நியர் ஆனார்கள். அவள் கதவைச் சாத்தினாள். இவர் குடைவிரிக்க மறந்து மழையில் நனைந்தபடியே தெருவில் நடந்தார்.

இப்போது நினைத்துப் பார்க்கும் ராமலிங்கத்திற்கு, மனம் தாளவில்லை. அந்த மனதை மழுப்புவதற்காக, 'சொந்த மகளாக இருந்தால் இப்படிப் போயிருப்பாளா' என்று மனம் கேட்டது . 'உன் மகளாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பாயா' என்று மூளை பதிலடி கொடுத்தது. மனம், மூளையையும், மூளை மனதையும் சீண்டிக் கொண்டன. கைகள் உதறிக் கொண்டன. கண்கள் சொருகிக் கொண்டன.

மங்கையர்கரசி. வாழையிலைச் சோற்றில், மீன்குழம்பை ஊற்றினாள். அது பருக்கைகளில் ஊடுறுவி, செஞ்சிவப்பாய் கசிந்தது. அவள் கையில் இருந்த மீன் துண்டுகள், பாளம்பாளமாய் இலையில் இறங்கின. பச்சைத் தளத்தில் அந்த செந்நிறத் துண்டுகள் இலையை மரகதப்பச்சையாக காட்டின. மங்கையர்கரசி அவரை அழைப்பதற்காக திருப்பினாள். அப்போது பல்வேறு குமுறல்கள். அவளிடமிருந்து வெளிப்பட்டன. ஒவ்வொரு குமுறலும், அவரை பல செக் ஷன்களில் குற்றஞ்சாட்டி கூண்டில் ஏற்றியது. பிராணிகளை வதை செய்த குற்றம்... ஒரு பெண்ணின் மனதை புண்படுத்தி வெளியேற்றிய குற்றம்... வீட்டுக்காரர் என்ற நிலப்பரப்பத்துவ மனோபாவம்... அதிகாரி என்ற பூர்ஷ்வாத்தனம்... இப்படி விதவிதமான குற்றச்சாட்டுகளை அந்தக் காலத்திலேயே பட்டதாரியான அந்தம்மா அடுக்கிக்கொண்டே போனாள். இறுதியில் ஒரு எச்சரிக்கையும் விடுத்தாள்.