பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

கொடி(ய)ப் பருவம்


இதற்குள், அந்தச்சிறுமியும் ஆட்டோவில் இருந்து வெளிப்பட்டு ஓடப்போனாள். பயல் அவள் கையை பிடித்து, தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான். அப்படியும் அவள், தனது கைகள் இரண்டையும் இறக்கைகளாய் மேலும்கீழுமாய் ஆட்டியபடியே வலையில் சிக்கிய குருவிபோல் துடித்தாள். விதவிதமான அவலக்குரல் எழுப்பினாள். இதைப்பொறுக்காத அந்தப் பயல், மார்த்தாண்டத்தை, சினிமாக் கதாநாயகன் போல் மிரட்டினான்.

'ஏய்.... பெருசு... உனக்கு அறிவு இருக்குதா. உன் ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா? என்கிட்ட மோதாதே... மரியாதையா போயிடு... எதாவது ஏடாகூடமா கிட்டநெருங்குன... மவனே ஒரே போடுதான்... அதோட, வெளிலபோய் ஏதாவது ஏடாகூடமாச் செய்தே... நாள் குறிச்சு உதைப்பேன்... சர்த்தான் போடா...'

ஒருகாலத்தில் பயப்படாத மார்த்தாண்டம், பயந்துதான் போனார். 'இப்படிபட்ட வனோடா உன் சகவாசம்?' என்பதுபோல அந்தச் சிறுமியை ஓரங்கட்டியும் பார்த்தார். இரட்டைச் சடை போட்டிருக்கிறாள். அதற்கு மேல் ரிப்பன் கட்டியிருக்கிறாள். காதுகளில் சின்னச் சின்ன மினுக்கந்தான். ஆகவே ஏழைப் பெண்ணாகத்தான் இருப்பாள். ரெண்டுங்கெட்டான் வறுமைச் சூழலில், வாழும் பெற்றோர். இவளை, தமிழ் கெடுத்தான் பள்ளிக்கு அனுப்பிப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும், வறுமையின் வெளிப்பாடாய், அம்மாக்காரி, இவள் தலையில் குட்டியக் குட்டு, இவளை இவனிடம் முத்தம் பெறவும் தரவும் தூண்டியிருக்கும். அப்பா திட்டியத் திட்டும். இவனது ஆசைவார்த்தைகளில் மயங்க வைத்திருக்கும்.

அந்தப்பயல், இப்போது இவரை நோக்கி நகருவதுபோல் தோன்றியது. வேறு வழியில்லாமல், மார்த்தாண்டம் பின்வாங்கினார். மனோபலத்திற்கு ஏற்ப தனக்கு உடல் பலம் இல்லை என்பதை அறிந்து துடித்துப்போனார். அதேசமயம், அந்த ஆட்டோ எண்களை கண்கள் வழியாய் மூளையில் பதிவுசெய்து கொண்டே திரும்பி நடந்தார். காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.... அய்யய்யோ... அதுகூடாத செயல்.... யானை வாய்க்குள் போன கரும்பும், காவல் நிலையம் போன பெண்ணும் சக்கையாகும். அப்போ என்ன செய்யலாம்?