பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பால் பயணம்


சம்பந்தத்துக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், சைக்கிள் பயலைக் காணவில்லை. கடைக்காரரிடம் கோபமாகப் பேசப் போனார். அது. அவர் இயல்புக்கு இயலாதது. கோபத்தைக் குளுமையாக்கியபடியே, "நாளைக்குச் சில்லறை வாங்கிக்கிறேன்" என்றார். கடைக்காரர் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தனவா இல்லையா என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமலே அவர் நடந்தார். நடை மாதிரியான ஓட்டம். ஒட்டம் மாதிரியான நடை.

சம்பந்தம், பிரதான வீதிக்கு வந்து, சுற்றுமுற்றும் பார்த்தார். கூட்ட நெரிசலில் அவளைக் காணாததால், கார்ப்பரேஷன்காரர்கள் காய்கறிகளையும் வாரிக் கொண்டு போகவேண்டும் என்று விருப்பப்பட்டார். பிறகு சீச்சி. இப்படியெல்லாம் நினைக்கப் படாது என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார். காரணம் அதே வீதியில் அந்தப் பெண் இப்போது தென்பட்டாள். எவளிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

சம்பந்தம் பொறுமையாக நின்றபோது -

அவள் நடந்தாள். கையில் பிடித்த தூக்குப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு, சராசரி நடையாய் நடந்தாள். காலில் கொலுசுச் சத்தம், அவரையும் சுண்டி இழுத்து நடக்க வைத்தது. அவளுக்குச் சுமார் நூறடி தள்ளி மனித நடமாட்டத்திற்காகக் கட்டப்பட்ட பிளாட்டார விளிம்பில் அவரும் அவள் நடைக்கு ஏற்ப நடந்தார். அவளுக்கு பின்னால், தான் செல்லவில்லை என்று எல்லாரும் அனுமானிக்க வேண்டும் என்பதுபோல், ஆங்காங்கே நின்றுயாரையோ தேடுவதுபோல் நின்றார். கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டார். பிறகு தேடியவர் கிடைக்கவில்லை என்பதுபோல் பாசாங்காய் நடந்தார். அதேசமயம் எதிரே தென்பட்ட ஒரே ஒரு நண்பரைப் பார்க்காததுபோல் முகத்தைத் திரும்பியபடியே நடந்து -

அவளை நெருங்கி விட்டார். பத்தடி வித்தியாசத்தில் நடந்தபோது, லேசாக இருமினார். அவள் திரும்பிப் பார்த்தாள். லேசாய் நின்று பார்த்தது மாதிரிகூட அவருக்குத் தோன்றியது. அவருக்குள் திருப்தி....