பக்கம்:சிதறல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அதிக வித்தியாசம் இல்லை. எல்லாம் நாலு வருஷம்தான் ‘சீனியர்’. அவளைப் பார்த்தால் அப்படித் தெரியாது. கொஞ்சம் குள்ளமாக இருப்பாள், அது அவளுக்கு வயதைக் குறைத்துத் தருகிறது.

நெட்டைப் பெண்களைப் பார்த்தால் யாருக்குமே அவர்களுக்கு வயது ஆகிவிட்டது போலத் தோன்றும். அதிலே நானும் ஒருத்தி. நான் நெடிலாக வளர்ந்து விட்டேன். அவள் குறிலாக நின்றுவிட்டாள். வளர்ச்சியில் பெரிய வித்தியாசம் வயதில் வித்தியாசத்தை மறைத்து விட்டது. என்னை அக்கா என்பார்கள். அவளைத் தங்கை என்பார்கள்.

எப்படியோ ஆசிரியையோடு பழகிவிட்டேன். அப்படிச் சில ஆசிரியர்களோடு பழகவும் முடிகிறது. நான் சொல்வேன், 'மடேம் நீங்கள் கல்லூரியில்தான் ஆசிரியர் வெளியே அல்ல' என்பேன். அங்கு மட்டும் நான் உனக்கு ஆசிரியர் அல்ல; நான் மாணவி என்பாள்.அதைச் சிந்தித்தால் சிரிப்பு வரும்.

அவள் சொல்கிறாள், ஆசிரியர்கள் முதலில் தம்மை மாணவராக மதித்துக் கொள்ள வேண்டும்: இன்னும் நிறைய படிக்க இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்தால் சங்கீதம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது என்பாள். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் யாரைக் குறிப்பிடுகிறாள் என்பது எனக்கு விளங்குவது இல்லை.

அவள் யாரோ தம் உடன் பணி செய்யும் ஆசிரியை பற்றி அப்படிப் பேசினாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதாவது வீட்டில் எதையும் படிப்பதில்லை என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டாள் என்று நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/17&oldid=1256911" இலிருந்து மீள்விக்கப்பட்டது