பக்கம்:சிதறல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அந்த நிகழ்ச்சியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அவன் வாழ்க்கையையே சினிமாப் படம் பார்ப்பது போல இதுவரை எட்டியே பார்த்து வந்தான். அவன் உள்ளத்து உணர்வுகளை நான் அறிய முயன்றதே கிடையாது; அவன் வெளிப்படுத்தியதும் இல்லை.

பாரசீகக் கவிதையை அம்மொழியில் படிக்காமல் மொழி பெயர்த்துப் படிப்பது போல் அவன் மெளனமாக என்னை ரசித்து வந்தான். பிறகுதான் தெரிந்து கொண்டேன். அவன் முதல் படம் வருவது படத்துக்காக அல்ல; எனக்காகத்தான் என்பதை நான் முதல் படத்துக்குப் போகிறேன் என்பதை அவன் தெரிந்து கொண்டான்; அதற்காகத்தான் அவனும் வந்தான் என்பதை இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன்.

என்னுடைய பிறந்தநாளை நான் விரும்பிக் கொண்டாடுவேன்; பொதுவாக அது அரசியல் தலைவர்கள் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதாவது personality cult அவர்களுக்கு நம்பிக்கை அதிகம் இருந்தது. அண்ணாசாலை வழியாகப் பல்கலைக் கழகத்துக்குச் செல்வது உண்டு. அப்பொழுது எல்லாம் இந்த போஸ்டர்களைப் பார்த்து இருக்கிறேன். ஒரு போஸ்டர் மறைந்தால் உடனே மற்றொரு போஸ்டர் அடுத்த மாதம் இடம் பெறும்.

எப்படியும் ஒரு தலைவர்க்கு மாறி மாறிப் பிறந்த நாள் வருவது உண்டு. ஆக அமைச்சர்கள் என்றால் பிறந்த தாள் கொண்டாட வேண்டும் என்ற நியதி அமைந்து கிடந்தது. இப்பொழுது அது மறைந்து வருகிறது. பொது வாழ்வில் இது ஒரு பெரிய மாற்றம் என்பதைக் காண முடிகிறது.

அந்த நாட்களில் எனக்குச் சில வாழ்த்துகள் வரும்; யார் அனுப்புகிறார்கள் என்பதே தெரியாது. அந்த முகமூடி மனிதர் யார் என்பதே தெரிவது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/59&oldid=1287891" இலிருந்து மீள்விக்கப்பட்டது