பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மலையாகும். கற்பனை என்பது சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தாலும், அந்தக் கற்பனைக் கருத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் மிகப் பலவாக உள்ளன.

நம் அனுபவத்தில் கேட்டவுடனேயே வெளிப்படையாகத் தோன்றுகின்ற அர்த்தம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது மிக ஆழ்ந்த கருத்துக்கு நம்மைக் கொண்டு செல்வதாக இருக்கின்றது. மிக எளிமையாக நாம் கேட்டு வருகின்ற பழமொழி போன்ற கருத்து ஒன்று உண்டு. அதுதான் 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் ', என்ற முதுமொழியாகும். இந்த முதுமொழியில், வாழ்க்கையில் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டிய, அடிப்படை கருத்து ஒன்று பொதிந்து இருப்பதைக் காண்கின்றோம்.

குழந்தையும் தெய்வமும்

குழந்தைகளிடத்தில் பெற்றோர்கள் காட்டுகின்ற அன்பிற்கு அளவில்லை, என்று கூறுவது மிகையாகாது. குழந்தையைப் பார்த்த உடனேயே, மன மகிழ்ச்சிப் பெருகி பேரன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர்கள் ஆகிவிடுகிறோம். குழந்தை அர்த்தமில்லாத மழலைச் சொற்களைச் சொன்னாலும் மகிழ்ச்சியோடு கேட்கின்றோம். பெற்றோர்கள் தன் குழந்தைக்குப் பேசத் தெரியாது என்று தெரிந்திருந்தும் அக்குழந்தையுடன் பேசுகிறார்கள்.

அலுவலகத்திற்குச் செல்லுகின்றபோது தன் குழந்தையைப் பார்த்து, ““என்ன! நான் போய் வரட்டுமா?" என்று கேட்டுவிட்டுப் போகின்றார். தகப்பன் பேசுவது அந்தக் குழந்தைக்குப் புரியாது. அதைப்பற்றித் தகப்பன் கவலைப்படுவதில்லை. பச்சைக் குழந்தையாகிய அதனிடம் தந்தை பாசத்தைக் காட்டுகின்றார். என்ன என்னமோ பேசுகின்றார்.