பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

விடும். ஆசிரியர், “நீ கெட்டிக்காரப் பையனாச்சே! ஏண்டா மார்க் குறைஞ்சுது? என்று கேட்டால், "அந்த நேரத்தில் எல்லாமே மறந்து போயிடுச்சு சார்! என்று சொல்லி விடுகிறான்.

மறதியே வரக்கூடாது என்பதற்காகத்தான் இலக்கிய மன்றங்கள் அமைத்திருக்கிறோம். அடிக்கடி இதில் பேசிப் பழக வேண்டும்.

திருவள்ளுவர், ' நீ அறிவாளியாய் இருந்தால் உனது அப்பா அம்மாவுக்கு மட்டும் பெருமை இல்லை. 'உலகத்துக்கே நீ சொந்தம்... என்று சொல்வார். "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார்.

ஆறு அறிவு

ஆடு, மாடு, பூனை, நாய் எல்லாம் ஐந்து அறிவுதான். மனிதனுக்குத்தான் ஆறறிவு; சில பேர் நாய்க்குட்டிகளைத் தூக்கி, அப்படியே கட்டிக்கொண்டு கொஞ்சுவார்கள், ஏன்..? ஒன்றுதானே வித்தியாசம்! 'நீ ஐந்து... நான் ஆறு...' என்பது தான்! சில பேர் அந்த வித்தியாசமே இல்லாமல் “ நீயும் ஐந்து, நானும் ஐந்து...' என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். அதனால் தான் சில நாய்க்குட்டிகள் சிலரது வீடுகளில் எஜமானனுக்குச் சமமாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்.

மகான் பாடல்

மனிதனுக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறாவது அறிவினால் உலகமெல்லாம் போற்றக்கூடிய பேராற்றலை அவன் பெற வேண்டும். ஆற்றல் பெற வேண்டும். உலகமெல்லாம் அவனைப் பின்பற்ற வேண்டும்.