பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

வாயைப் பிடுங்குதல்

சிலர் பேசிக் கொண்டிருக்கும்போது சிறிது கோபம் வந்து விட்டால் மற்றவர்களைப் பார்த்து, 'என்னுடைய வாயைப் பிடுங்காதே' என்று சொல்வார்கள். ஏனென்றால் இதுவரை, அவன் பேசியதைவிட இன்னும் மோசமான வார்த்தைகளை அவன் பேசுவான் என்பது குறிப்பு. இதற்கு உதாரணம் சொன்ன திருவள்ளுவர், வேரினைப் பிடுங்குதல் என்று சொல்லப்படுகின்ற பழக்கச் சொல்லினைக் கூறியிருப்பதை நாம் சிந்திக்கின்றபோது இன்று நடைமுறையில் கேட்கின்ற சொற்களும் மிகப் பழமையான காலத்திலிருந்தே எப்படியோ சமுதாயத்தில் வழங்கி வந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மை புலனாகிறது.

இதைக் கீழ்க்கண்ட குறளால், குறளாசிரியர் விளக்குகிறார்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். [959]
"உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்புதாம் ஒப்பு" [993]

இந்தக் குறட்பா, உறுப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து 'இவன் மனிதன்தான்' என்று சொல்லக்கூடாது. மனிதனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் தன்மைகள் இருந்தால்தான் அவனை மனிதன் என்று சொல்ல வேண்டும் என்று கூறுகிறது.

ஆசிரியர் சொல்லுகின்ற இந்த அளவுகோலைக் கொண்டு அளந்து பார்த்தால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், உலக மக்களுக்கெல்லாம் சன்மார்க்கத்தை நல்வழியினைச் சொல்ல வந்த மகான்கள், 'மனிதன் காட்டிலே வாழ்வது சுலபம். - நாட்டிலே வாழ்வது கடினம்' என்று சொன்னார்கள்.