பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

அதனால்தான் நாட்டிலே இருக்கக்கூடிய நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக அறநெறிகள், புத்திமதிகள் சொல்லப்பட்டன.

'காட்டிலே வாழ்வது சுலபம்' என்று பெரியவர்கள் சொல்வதை எல்லோரும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது. காட்டிலே கொடுமையான மிருகங்களெல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க மனிதன் காட்டிலே வாழ்வது சுலபம் என்று பெரியவர்கள் சொல்வதை எப்படிக் கேட்டுக் கொண்டிருக்க முடியும்? இதுபோன்ற கருத்து சிந்தனைக்கு உரியதுதான்.

காட்டிலே கொடுமையான மிருகங்கள் இருந்தாலும் அவைகளை அடையாளம் கண்டு கொள்ள ஆண்டவன் வித்தியாசமான முகங்களைக் கொடுத்துவிட்டார். முகங்களைப் பார்த்தவுடனேயே, இது நரி, இது காண்டாமிருகம், இது கரடி என்றெல்லாம் அடையாளம் கண்டு கொண்டு தப்பித்து ஓடி விடலாம். ஆதலால்தான்--- அதாவது தப்பித்துக்கொள்ளும் வழி இருப்பதால்தான்--- காட்டிலே வாழ்வது சுலபமென்று சொல்லிவைத்தார்கள்.

ஆனால் நாட்டிலே மக்களிடையே வாழ்வது தான் மிகமிகக் கடினம். ஏனென்றால், மக்களாகப் பிறந்த அனைவருக்குமே முகத் தோற்றம் ஒரே மாதிரி படைக்கப் பட்டுவிட்டபடியால் -- இவர்களிலே எது நரி, எது கரடி, எது புலி என்று கண்டுகொள்ள முடியாமல் நாமே சில நேரங்களில் கரடித் தோளில் கையைப் போட்டுக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம். அந்த 'மனிதக் கரடி' ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டுப் போகிறது. ஆதலால்தான் மனிதன் என்று அளந்து பார்க்கின்ற கருவி குணம் தான் என்பது. விளக்கமாய்ச் சொல்லப்பட்டது.