பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பிறரைக் கண்டு பொறாமைப் படுதலும், அந்தக் காரணத்தினால் பிறரை இழிவாகப் பேசுவதும், கடுங் கோபம் கொள்ளுதலும், மற்றும் இவை போன்ற தன்மைகள் எல்லாம் மனத்தின் அழுக்குகளை நிறைய உண்டாக்கி விடுவன ஆகும்.

ஜாதி, மதம், சமயம் என்பவைகளினால் மற்றவர்கட்குத் துன்பம் செய்தல் என்பதும்---மற்றவர்களை இழிவாகப் பேசுதலும், கடுங்கோபம் கொள்ளுதலும், மற்றும் இவைபோன்ற தன்மைகள் எல்லாம் மனத்தின் அழுக்குகளை நிறைய உண்டாக்கி விடுவன ஆகும்.

இவைபோல, எத்தனையோ கொடிய எண்ணங்கள் சிறிதளவும் மனதில் நேராமல் பார்த்துக்கொள்ளகிற தூய்மையான மனத்தினைத்தான் திருவள்ளுவர் "அறம்" என்று சொல்கின்றார். அறமேதான் இறைத்தன்மையும் ஆகும். அறம் இல்லாமல் மனத்தினை வைத்துக் கொண்டு. செய்யப்படும் செயல்களும் பேசும் பேச்சுக்களும், ஆக அனைத்துமே ஆரவாரத்தன்மைகள் ஆகும்.

அறம்

அறம் என்ற சொல்லினை இரண்டு குறட்பாக்களில் அமைத்து அறம் என்பதனை விளக்கிக் காட்ட, மனம் தூய்மையே எல்லாம் என்று எடுத்துக் கூறுகிறார். மனத்திலே அழுக்கு வைத்துக் கொண்டு செய்யப்படுவன எல்லாம் பயனற்றவை என்றும், வெளிப்பகட்டுக்காகச் செய்யப்படும் ஆரவாரங்கள் என்றும், இரண்டு குறட்பாக்கள் கூறுகின்றன. அந்தக் குறட்பாக்களைச் சிந்திப்போமாக!

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற" (கு. 34)

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்." (கு. 35)