பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

இத்தகைய கருத்துக்களைக் காணுகின்றபொழுது, அனைத்திற்கும் காரணமாக அமைந்திருப்பது மனத்தின் தூய்மையான நிலையே ஆகும் என்பதும், மனத்திலே தீய குணங்கள் எல்லாம் குவித்துக்கொண்டு அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசப்படுகின்ற பேச்சுக்கள், செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பயனற்றவைகளே ஆகும் என்பதோடு, அறியாமையும் ஆகும் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. சித்தர்கள் , பாடல்களில் மிக அருமையாகச் சொல்லிச் சென்றார்கள்.

“'கோயிலாவ தேதடா! குளங்களாவ தேதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே.

சித்தர் வாக்கு

சித்தர்களுடைய அரிய உண்மைகளை நல்லமுறையில் மக்களிடையே பரவச் செய்யாத குற்றம் நம்முடையதே என்று அறிஞர்கள் வெட்கமில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டும். சித்தர் பெருமக்கள் அனைவரும் மனத்தினைத் தூய்மைப் படுத்துவதையே முதன்மையாக வைத்துப் பாடியிருக்கிறார்கள்.

மனம் தூய்மைதான், இறைவனுக்கு வழிபாடாகும், என்பதனையே மக்களிடையே சொல்லாததால் மக்களில் பலர் அழுக்கு மூட்டைகளை மனத்திலே சுமந்து கொண்டு வெளிப்பகட்டான வீணான செயல்களைச் செய்துகொண்டு, இறை நெறியினையே மறைத்துவிட்டார்கள்.

மனத்தின் சிறப்பினை மகான் இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்லுகின்றார்.

"வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனம் கடவுளையே எப்போதும் நோக்கி நிற்குமாகில் ஆபத்து வாராமல் காக்கும்.