பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இழிவான தன்மைகள் கொண்டவர்களே 'கயவர்கள்' என்பதனை குறட்பா ஒன்று கூறுகிறது.

"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்."

தோற்றத்தால் முழுக்க முழுக்க மக்களைப் போலவே கயவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கீழான தன்மைகளை எல்லாம் கொண்டு வாழ்வார்கள். அவர்களுக்கு ஒப்பாக - சமமாக - கூறுவதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை என்று சொல்ல வேண்டும்.

மக்கள், ஒப்பு

ஒருவருக்கு பெருமை தேடித் தருவதெல்லாம் அவருடைய குணங்களேயாகும் என்பதனை நன்கு அறிந்து உணர்தல் வேண்டும். நல்ல குணங்களும் உயர்ந்த பழக்க வழக்கங்களும் கொண்டவர்களால் தான் ஒரு சமுதாயம் மேலோங்கி உயர்ந்த நிலை அடைய முடியும். இயல்பாகவே மக்களைப் பார்த்து கணிக்கின்றபொழுது உறுப்புகள் எல்லாம் மக்களுக்கு இருக்கின்ற மாதிரி இருந்தால் மக்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்துக் கணக்கிடுகின்றோம். அவ்வாறு செய்யக் கூடாது என்பது உயர்ந்த மறையின் அறிவுரையாகும்.

உறுப்புகளைக் கணக்கிட்டு ஒத்துப் பார்த்து மக்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்துப் பேசுதல் பொருந்தாது என்றும்,பண்பினை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டுப் பார்ப்பதுதான் முறை என்பதனைக் குறட்பா ஒன்று சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. பொருத்தமாக ஒப்பு என்பதனை "வெறுத்தக்க" என்ற சொல் அழகாக சுட்டிக் காட்டுகிறது.

"உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.