பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பண்பும் ஒழுக்கமும்

பண்பு நிறைந்தவர்களும், ஒழுக்கம் நிறைந்தவர்களும் இன்ன பிற சொற்களினால் -- அழைக்கப்படும் மக்கள் நிறைந்திருந்தால்தான், ஒரு நாடு முன்னேற்றம் அடையும். பசி, பட்டினி, வறுமை என்றெல்லாம் பேசக் கூடிய கொடுமை நீங்க வேண்டும் என்றால் பண்பாளர்கள் நிறைந்திருக்க வேண்டும்.

கல்வி கற்றிருந்தும் அறிவு இல்லாதவர்களாகப் பலர் இருப்பது உண்டு. அத்தகைய மக்களை 'பலகற்றும் - அறிவில்லாதார்' என்று ஆசிரியர் குறிப்பிடத் தயங்கவில்லை. நல்ல நூல்களை ஓதி அறிந்தும் கெட்டிக்காரர்களாக இருந்தும், சமுதாயத்திற்குத் தீமை விளைவிப்பவர்களாக, இருக்கின்ற கூட்டத்தினரைப் பார்த்து,

"ஓதி உணர்ந்து, பிறர்க்கு உரைத்து தான் அடங்காப் பேதை" என்று ஆசிரியர் சொல்லுகிறார்.

இத்தகையவர் ஓதுவதிலும் உணர்வதிலும் என்ன பயன்? என்று கேட்கிறார்.

அறிவுக்கு வினா

ஒரு சிலர், சிறந்த அறிஞர்கள் என்று சொல்லக் கூடிய அளவில் இருந்துகொண்டு இருப்பார்கள். நுட்பமான மதி படைத்தவர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். நுணுக்கமான ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் மனிதப் பண்பாடு இல்லாமல் பிறருக்குப் பயன்படாமல் வாழ்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அறிவு பெற்றிருந்தும் யாது பயன் என்று ஆசிரியர் கேட்டு வைக்கிறார்.

"அறிவினால் ஆகுவது உண்டோ?"
"அஃகி அகன்ற அறிவு என்னாம்?'''

சி.க.--5