பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

காலத்தில் அவர்களில் ஒருவர் இருவரைத் தன் வசப்படுத்திக் கொள்ளவோ, தன் பகைக் கும்பலிலிருந்து விட்டுப் பிரிந்து செல்லும்படிச் செய்யவோ, ஏதாவது சிலவற்றை இழக்க முனைவதுதான் ஒரு புத்திசாலித்தனமான அரசனின் செயலாக இருக்க முடியும்.

எண்ணித் துணிக கருமம் :

எவ்விதமான ஆலோசனையிலும் முக்கியமான பிரச்சனையில் உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எப்பொழுதும் தீர்மானமற்ற நிலையிலும் நிலையற்ற தன்மையிலும் இருப்பது நல்லதல்ல.

லத்தின்காரர்கள் ரோமானியரிடமிருந்து பிரிந்து விடுவது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். ரோமானியர்களும் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்து அவர்களுடன் நட்புப் பாராட்ட விரும்பினார்கள். அதற்காக லத்தின் மக்களில் எட்டுப் பேரை ரோமாபுரியில் நடக்கும் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ரோமானியர்களின் இந்த நல்லெண்ணத்தைப் பற்றி அறிந்த லத்தின்காரர்கள், இதுவரை தாங்கள் அவர்கள் கசப்படையும்படிச் செய்த பலகாரியங்களையும் மனத்தில் வைத்துக்கொண்டு, யாராரை அனுப்புவது என்னென்ன பேசும்படி அவர்களிடம் சொல்லியனுப்புவது என்று ஆராய்ந்தார்கள். அப்போது, பிரேட்டர் அன்னியஸ் என்பவன் கூறிய வார்த்தைகள் இவை:

“நாம் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதைக் காட்டிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்ப்தே நம்முடைய நன்மைக்குப் பெரும் முக்கியத்துவமுடையது என்று நான் கருதுகிறேன். இந்த விஷய்த்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், நம் செயல்களுக்குத் தகுந்தாற்போல் நம் வார்த்தைகளை அமைத்துக் கொள்ளலாம்”

இது உண்மைதான்! ஒருவிதமான தீர்மானமுமற்ற சந்தேகமான இரண்டுங்கெட்டான் நிலையில் ஒருவன் எவ்வளவு பேசினாலும் தன் நிலையை விளக்கிச் சொன்னவனாக மாட்டான். தீர்மானமாக ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், அப்புறம் அவன் அதற்குத் தகுந்தாற்போல் பேசிக் கொள்ளலாம்.