பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


விவசாயி ஜீயான்மாட்டியோ, பிளாரென்சு பட்டணத்திற்குப் பெரிய பணக்காரனாகத் திரும்பி வந்தான். (மன்னன் அவனுக்கு ஐம்பதினாயிரம் டூக்காட்டு பணம் கொடுத்தனுப்பினார்) அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவன் அமைதியாகவும் இன்பமாகவும் வாழலாமென்று எண்ணியிருந்தான். ரோடெரிக் பிரபு தனக்குத் தீமை செய்ய நினைக்கக் கூடும் என்று அவனால் நம்பக் கூடவில்லை. ஆனால், பிரெஞ்சு மன்னர் எட்டாவது லூயிஸ் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்ற செய்தி கேட்டு அவன் கவலைக்குள்ளானான். பிரெஞ்சு மன்னரின் அதிகார பலத்தையும், ரோடெரிக்கின் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்து நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மன நிம்மதியே போய்விட்டது. தம் குமாரியை எவ்விதத்திலும் குணப்படுத்த முடியாத மன்னர், விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுக்கு ஓர் ஆளனுப்பினார். ஆனால், அவன் வர மறுத்துவிட்டதைக் கண்ட மன்னர், ஊர்ப் பெரிய மனிதர்களிடம் சொல்ல வேண்டி வந்தது. அவர்கள் மன்னர் ஆணையை மதித்து நடக்கவேண்டுமென்று அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். மனத்துயரத்தோடு அவன் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். முதலில் மன்னர் பிரானிடம் சென்று தான், பேய் பிடித்த பெண்கள் சிலரைக் குணப்படுத்தியிருந்தாலும், எல்லாப்பேய்களையும் தன்னால் விரட்ட முடியாதென்றும், சில பேய்கள், எவ்வளவு மந்திரஞ் சொன்னாலும், பயமுறுத்தினாலும் அஞ்சுவதில்லையென்றும் கூறினான். இருந்தாலும் தான் முயன்று பார்ப்பதாகவும், முடியாவிட்டால் மன்னித்துக் கொள்ளும்படியும் கூறினான். ஆனால், மன்னர் பெரும் சீற்றத்துடன், தம் குமாரியை குணப்படுத்தாவிட்டால் அவனைத் தூக்கிலிட்டு விடுவதாகக் கூறிவிட்டார். விவசாயி ஜீயான் மாட்டியோவை இது பெருஞ் சங்கடத்திற்குள்ளாக்கியது. இருந்தாலும் அவன் தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அந்த அரசகுமாரி தன்னருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவுடன், மெல்ல அவள் காதருகில் சென்று ரோடெரிக்கிடம் தன் நிலையை எடுத்துக சொல்லித் தன்னைக் காப்பாற்றும்படி மிகவும் தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“ஆ! கீழ்த்தரமான துரோகியே! என் முன்னால் வர உனக்கு என்ன துணிச்சல்? என்னை வைத்து மகாப் பெரிய பணக்காரனாகிவிட முடிவு செய்துவிட்டாயா? கொடுக்கவும் கெடுக்கவும் என்னால் முடியும் என்பதை நீயும் மற்றவர்களும்