பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

வாலிபன் அல்ல என்றாலும் கிழவனும் அல்ல. யார் வீட்டுக்காவது விருந்துக்கோ நடனத்திற்கோ அந்த அழகி வருவாள் என்று எதிர்பார்க்கலாமென்றால் அதற்கும் வழியில்லை. ஏனென்றால், அவளுக்கு நண்பர்களோ உறவினர்களோ கிடையாது. வெளி வேலைக்காரர்கள் யாரையும் அவர்கள் வீட்டுக்குள்ளே விடுவதில்லையாம். உள்ளேயிருக்கிற வேலையாட்களைக் கொண்டு ஏதாவது முயற்சி செய்யலாம் என்றால், அவர்கள் அந்தக் கற்புக்கரசியின் தூய குணங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளை நெருங்குவதற்கே வழியில்லாமல் இருக்கிறது.

சிரோ : அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

கலி : இருந்தாலும் நான் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கச் சில காரணங்கள் இருக்கின்றன.

சிரோ : என்ன?

கலி : அவளுடைய கணவன் மெசர் நிக்கியா படித்துப் பட்டம் பெற்ற மனிதரே தவிர புத்திசாலியல்ல. மிகவும் சாதாரணமான ஒரு முட்டாள். அடுத்தபடியாக, அவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு பிள்ளைக்கூடப் பிறக்கவில்லை. பிள்ளை வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். மூன்றாவதாக அந்தப் பேரழகியை பெற்றெடுத்த ஒர் தாய்க்காரி ஒர் உல்லாசப் பெண்மணி. பெரிய செலவாளி, ஆனால், இப்போது அவளிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருப்பதால் அவளை எப்படி வசப்படுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.

சிரோ : நீங்கள் சிறிதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?

கலி : இல்லையென்று தான் சொல்லவேண்டும். ஆனால், திருமணங்கள் பேசி முடிக்கிற தரகன் லிகுரியோவை உனக்குத் தெரியுமே. அவன் மெசர் நிக்கியாவிடம் நல்ல பழக்கமுடையவன். பணமுடை ஏற்படும்போதெல்லாம் அடிக்கடி அவரிடம் சில்லறை வாங்கிக்கொள்வான். நான் அவனிடம் என் காதலை எடுத்துச் சொன்னேன். அவன் தன்னால் முடிந்தவரை உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறான்.