பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

உரிமைகளையும் கடமைகளையும் அவன் ஏற்படுத்திய அரசியலமைப்பு வரையறுத்து வழங்குவதாயிருந்தது. அதனால் அந்த அரசு எண்ணூறு ஆண்டு காலம் வரை நிலைத்து நிற்க முடிந்தது. சோலோன் என்பவன் ஏதேனியர்களுக்காக வகுத்த அரசியலமைப்பின்படி ஏற்படுத்திய பொதுக் குடியாட்சியோ சிறிதே காலத்தில் முடிவடைந்துவிட்டது. சோலோன் தான் சாகுமுன்னாலேயே கொடுங்கோலரசு உதயமாகிவிட்டதைக் காணும்படி நேர்ந்துவிட்டது.

ரோமாபுரியில் லைக்கர்கஸ்ஸைப் போல் கூரிய அறிவுள்ள சட்ட அமைப்பாளன் இருந்ததில்லை. என்றாலும் ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையேயிருந்த ஒற்றுமையின்மை, நீதிமுறைகளால் முடியாத ஓர் அசாதாரணமான வாய்ப்பையுண்டாக்கி ரோம சாம்ராஜ்யத்தை நீடித்து நிலைக்கச் செய்தது, ஆகவே, முதல்தரமான இன்பத்தைக் காணாவிட்டாலும் ரோமாபுரி இரண்டாந்தரமான மகிழ்ச்சியையாவது காண முடிந்தது. ரோமுலஸ் முதலிய அரசர்கள், சுதந்திரமுள்ள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல நீதி முறைகளைக் கொண்டுதான் அரசாண்டார்கள். ஆனால், குடியரசு அல்லாத முடியரசை நிலைநிறுத்த அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள். இந்த மன்னர் ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற மக்கள், மன்னர்களை வெளியேற்றிவிட்டு, அவர்கள் இருந்த இடத்தில் இரண்டு தலைமை அதிகாரிகளை ஏற்றிவைத்தார்கள்.

இதனால் ரோமாபுரியில் அரசன் என்ற பெயர் ஒழிந்ததே தவிர ஆதிபத்திய முறை மாறவில்லை. தலைமையதிகாரிகளும் ஆட்சிக்குழுவினரும் அடங்கிய அரசாங்கத்தில் முடியாட்சி முறையும், மேன்மக்களாட்சி முறையும் இருந்ததே தவிர பொதுமக்கள், அதிகாரம் செல்லுபடியாகவில்லை. நாளடைவில் உயர்குலத்தவர்கள் அல்லது பிரபுக்களின் இறுமாப்பு, பொதுமக்களை அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தது. பிரபுக்கள் தங்கள் அதிகாரம் முழுவதையும் இழந்துவிடாமலிருக்கப் பொதுமக்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டியதாயிற்று. இவ்வாறுதான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறை ஏற்பட்டது. மூன்று வித ஆட்சிகளின் கூறுகளும் அடங்கிய அந்தக் குடியரசு வலுப்பெற்றது. மூன்று சக்திகளும் கலந்து ரோமாபுரியின் அரசியலமைப்பை முழுமையடையச் செய்தன.