பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தவத்திரு அடிகளார்



26. “விமரிசனத்தை ஏற்றுக் கொள்ள தவறான மனப்போக்குடையவர்கள் முன்வர மாட்டார்கள். “என்னையா” என்று ஆத்திரப்படுவார்கள்”.

27. “நாம் என்ன சொல்லுகிறோம்; எதற்காகச் சொல்லுகிறோம் என்பதல்ல முக்கியம். சொல்லப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே விளைவுகள் அமையும்”·

28. “உணர்ச்சி உடைய உறவுகள் மட்டுமே இருந்து, ஒத்துழைப்பு இல்லையானால் அது மகப்பேறு இல்லாத மனையறம் போன்றது”·

29. “வாத நோயினும் கொடியது, பழக்க வழக்கங்களில் வழிபட்ட மனம்”.

30. “குற்றங்களை மறைக்க விரும்புபவரின் சிறந்த கருவியே கோபமும், உரக்கப்பேசுதலுமாகும்”.

31. “காலம் சொல்லும்” என்பது பொறுப்பை வரலாற்றின் மீது சுமத்தி விட்டு வறிதே வாழும் இயல்பினரின் கூற்று”.

32. “காணல், கலந்து பேசுதல் ஆகியன கடமைகளைச் செய்யும் மனிதனின் தேவைகள்; தவிர்க்க முடியாத தேவைகள்”.

33. “எந்தவொரு உண்மையான உழைப்பும், உணர்வும் கட்புலனுக்கோ அனுபவத்திற்கோ வாராமல் போகாது”.

34. “பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டுத் திறமைகளைக் கணக்கிட முடியாது. பணி செய்யும் பாங்கும் திறமையுமே அளவுகோல்கள்”.