பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

11



72. “கலைத்துறையில் ஈடுபட்டு மகிழும் வாய்ப்பில்லாத ஏழைகள் வீட்டிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்”.

73. “உயிர் வளர, வாழ களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. இந்த அடிப்படையிலேயே பால் வேறுபாட்டுடன் கூடிய படைப்பு”.

74. “தனி நபர்களிடம்கூட அரசுகள் அஞ்சுகின்ற அளவு குறை ஏற்பட்டுப் போய்விட்டது”.

75. “ஒரு பொருள் பற்றித் துணிந்து முடிவு எடுக்கவும் செயற்படுத்தவும் இயலாதவர்களில் பலர் வாய் வீச்சில் ஆர்ப்பரிப்பர் என்பது சமுகாயத்தில் கண்ட உண்மை”.

76. “சார்புகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றவர் கூறும் செய்திகளைத் திறந்த மனத்தோடு கேட்டு ஆராய முன்வர மாட்டார்கள்”.

77. “சார்புகளின்மீது இறுக்கமான பற்றுக் கொண்ட மனம் புகை படிந்த கண்ணாடி போன்றது. எதையும் காட்டாது”.

78. “சமயங்கள் தோன்றிய காலத்திலிருந்து நிலவிவரும் சிக்கல்களுக்கு சமயத் தலைவர்கள் இது வரை தீர்வு கண்ட பாடில்லை”.

79. “இந்து சமயத் தலைவர்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாதது மட்டுமன்றி மேலும் சமூகச் சிக்கல்களைக் கடுமைப்படுத்துகின்றனர்”.

80. “ஒரு நிறுவனமும் அதனுடைய கொள்கை அமைப்புமே மிகப்பெரிய கருவி. இதனை முறையாக இயக்கிப் பயனடைய ஆற்றலுற்றவர்கள் புதிய புதிய அமைப்புக்களை நாடிச் செல்வர்”.