பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

89


உயர்த்தப் பயன்பட்டது. மதத்திற்குத் தலைவர்களும் புரோகிதர்களும் உருவானார்களே அன்றிலிருந்து மதம், மக்களுக்கு நன்மை செய்யவில்லை. தீமையே செய்தது: செய்துவருகிறது.”

785. “மறந்தும் சிற்றெல்லைகளில் மனிதன் விருப்பம் கொள்ளக்கூடாது; விருப்பம் காட்டக்கூடாது. இது வளர்ச்சியை-ஆன்மாவின் விடுதலையை தடுக்கும்.”

786. “பொல்லாத மனிதன் உருவாக்கிய எல்லைகளின்று விடுதலை பெறுதலே உண்மையான விடுதலை.”

787. “நமது இரு செவிகள் ஒன்றையொன்று நோக்காது எதிர்த்திசையில் அமைந்திருப்பதின் நோக்கமே இரு பக்கங்களையும் கேள்என்பதற்காகவே.”

788. “அறிவார்ந்த அன்பே, வாழ்க்கைக்குப் பயன்படும்.”

789. “உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் மனித வாழ்நிலை உயர்ந்தது.”

790. “போர்க் கருவிகளின் வளர்ச்சியால் மனித நாகரிகம் பாழ்பட்டது. மனிதகுலம் அழிவின் எல்லைக்குச் சென்று கொண்டிருக்கிறது.”

791. “நாடு, மொழி, இனம், மதம் ஆகியனவற்றைக் கடந்தது ஒருமைப்பாடு.”

792. “ஒருமைப்பாடு அமையாத நாட்டில் வளமான வாழ்க்கை அமையாது.”

793. “சட்டத்தின் சில விதிகளை அமுல்படுத்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திற்கு வழங்கக்கூடாது."