பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 149 இவர்கள் உற்பத்தியை விற்பனை செய்யக் கடை யென்று ஒன்று எங்கோ வைத்திருந்தார்கள். என்றாலும், அது ஒழுங்காக வேலை செய்த மாதிரித் தெரியவில்லை. ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவங் களில் அவர்கள் விரித்த கடையையே நம்பியிருந்தார்கள். கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், கந்தசாமி கோயில் தவிர, ஒரு ஐந்தாறு மைல் வட்டாரத்தில், பட்டணத்தில் அவர்களுக்குத் தெரிந்தபடி வெவ்வேறு மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில்கள் இருந்தன. இரவு எப்படியும், மிச்ச சரக்குடனும், வசூலுட னும் வீடு திரும்பி விடுவார்கள். முற்பகல் வேளைக்குப் பையன்கள் பட்டறையில் இருப்பார்கள். பிற்பகலில் வியாபாரத்தைக் கவனிப் பார்கள். மாலை விளக்கு வைக்கும் நேரத்துக்கு, அல்லது இரவு வீடு திரும்பியதும் விற்பனைத் தொகையை அப்பாவிடம் ஒப்புவிப்பார்கள். அவர் வெகு ஜாக்கிரதையாக எண்ணி, உள்ளே அலமாரியில் பூட்டி வைத்துக் கொள்வார். அன்றாடச் செலவுக்கு, அரிசியிலிருந்து எண்ணெய் வரை, அவருக்கும் பாட்டிக்கும் ஆயிரம் தர்க்கங்களுக் கிடையே அலமாரியிலிருந்து வழங்குவார். கடை கண்ணிக்குப் போவதெல்லாம் பாட்டிதான். ஆட்சி, இன்றைய பாஷையில், இரும்புக் கரம்தான். ஐயாவுக்கு நடந்தது, இதுவும் இன்றைய பாஷை தான். வெள்ளிக்கிழமையன்று மாலை பெருமாளுக்கு விசேஷ பூஜை, தேங்காய், சீப்புப் பழம், பொரிகடலை நிவேதனம். பட்டறையில் வேலை செய்வோருக்குப் பட்டுவாடா, பையன்களுக்குக் கைச் செலவுக்குத் தலா இரண்டனா, எனக்குக் கிடையாது. காசு வாங்கக் கூடாதுன்னு ஆத்தில உத்தரவு. பொரிகடலை போனாப் போறது. கொடுத்தா வாங்கிக்கோ நீயே மொக்க வேண்டாம். உன் தம்பிகளுக்கும் கொடு.