பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 297 சந்தானம் வீட்டில் மின்சாரம் கிடையாது. இரண்டு வீடு தாண்டி, அவன் சோதரி வேப்பிலை வீட்டிலும் இல்லை. மண்ணெண்ணெய் விளக்குதான். ஆகவே, அந்தி விழுந்ததும், இந்த இரண்டு வீடுகளிலும் மட்டும் பண்டை நாள் என் பையல் பருவத்தின் கிராமத்துக் களை அப்படியே வழிகிறது. முதன் முதலாக, என் ஆறு வயதில் அண்ணா கையைப் பிடித்துக்கொண்டு- அப்பாவை அப்படித்தான் அழைப்போம்- எப்படிப் பார்த்தேனோ, அப்படியே, அன்றுபோல் இன்றும், பெருந்திரு இங்கேயே நின்று கொண்டிருக்கிறாள். மூலவர் பின் எப்படி இருப்பான்? எனக்குத் தெரியவில்லையா? ஆனால் இப்போது என்னால் நேரே நிற்க முடியவில்லை. ரொம்ப நாள் முன்னாலேயே இடுப்பொடிஞ்ச மாடு என்று பேர் வாங்கியாச்சு. இப்போ கேட்கணுமா? எனக்குக் கால் வலிப்பதால், வருடாதி வருடமாக நின்றுகொண்டிக் கிறாளே, இவளுக்கு வலிக்கல்லியா என்று தோன்றுகிறது. இது என் சளைப்புத்தான். சிவராஜ குருக்கள் இல்லை. அவர் பிள்ளை கணேசன் தான் இப்போ. ஒருமையில் எழுந்த விளிப்பைச் சிரமத்துடன் மாற்றிக் கொள்கிறேன். எனக்காகவே, கற்பூர ஆரத்தியை அவள் முகத்துக்கு நெருக்கத்தில் காட்டுகிறார். இந்த வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கக்கூடும். ஆனால் ஸ்தானம் எப்படி ! எண்ணெய்ப் பசையின் பளபளப்பில், கற்பூரச் சுடராட்டத்தில், அவள் புன்முறுவல் ஒளி வீசுகிறது. இத்தருணத்தில் இரண்டு வித நினைப்புகள் என்னைச் சேர்ந்தாற்போல் அழுத்துகின்றன.