பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், தன்னிகரில்லாத தமிழ்ப் புலமையையும் வரலாற்று வழியே படம் பிடித்துக் காட்டி விடுகிறார் மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள்.

என்ன இருப்பினும், இஸ்லாமிய மரபினை மறந்து விடாமல் நினைவூட்டுகிறார். ஜனாப் சையத் முஹம்மத் (ஹஸன்) அவர்கள்.

அத்தனைக்கும் அடக்க உரையாக, அறிஞர் அல்ஹாஜ் எஸ். எம். சுலைமான் ஐ.ஏ.எஸ் அவர்களின் தொடக்கவுரை அமைந்திருக்கிறது.

இந்நூலிலேயே மிகச் சுவையான பகுதியாக சீறாவும் அதன் சார்பு நூல்களும் அச்சு வாகனமேறிய வரலாறும் அமைந்திருக்கிறது. அந்த வரலாற்றைப் பூரணப்படுத்த அது தொடர்புடைய வாசகர் வட்டம் உதவும் எனத் தொகுப்பாசிரியர் எதிர்பார்ப்பது நியாயமேயாகும்.

பாரம்பரியமாக நறுமணப் பொருட்கள் தயாரித்தளிக்கும் உமறு தமிழ்க் கவிதைப் பாக்களைக் கோத் து இஸ்லாமிய இன் தமிழ்க் காவியமாக்கித் தந்தார்.

முன்னுாறு ஆண்டுகன் வரலாற்றையுடைய அம் மாகாவியத்திற்கு மீண்டும் மணம் பூச முற்பட்டிருக்கிறார் ஜனாப் மணவை முஸ்தபா அவர்கள்.

வாடா மலர்களைக் கொண்ட அமரகாவியம் சீறாப் புராணம் அதற்கு மாறாகப் புகழ்மணம் சேர்க்கும் துணை நூல்,' சிந்தைக்கினிய சீறா’

தமிழ்ச் சமுதாயம், தரமான இம்முயற்சிக்கு தரும் ஆதரவு மேலும் பல தொகுப்புகள் தோன்ற, துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கருணை மிக்க இறைவனின் இன்னருள் எல்லாப் பணிகளுக்கும் துணை நிற்குமாக.

அன்பன்,
ஆ. கா. அ. அப்துஸ் ஸ்மத்