பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உமறு தரும் பெண்மை நலம்

டாக்டர் கிருட்டிணா சஞ்சீவி, எம்.ஏ., பிஎச்.டி.

'உலகம் பெண்-ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப்பட்டிருக்கிறது இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடை பெறாது',

பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்’ -என்பது பெண்ணின் பெருமை என்ற நூலின் ஆசிரியர் திரு.வி க. அவர்களின் முன்னுரை தரும் பொன்னுரை.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பாலை நிலமான அரபு நாட்டில் தோன்றினார் (இறுதி) நபிகள் நாயகம் (சல்). இவர் தீனுல் இஸ்லாமை நிறுவினார். இவரது வரலாற்றைத் தமிழ் நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து சிறப்புற்றிருந்த உமறுப்புலவர் தமிழ் இலக்கிய மரபுகளைத் தழுவித் தமிழ்க் காப்பியமாகப் பாடியுள்ளார். உமறு பாடிய சீறா வரலாறு தழுவிய காப்பியம், வரலாறு நிகழ்ந்த இடம் அரபுநாடு எனினும் காப்பியத் தலைவர் அரபு நாட்டினர் எனினும் தமிழ்நாட்டுக் காட்சிகளும் தமிழ்ப் பண்புகளுமே சிறக்கப் பரக்கச் சீறாவில் பேசப்படுகின்றன. காப்பியத்தில் காணப்படும் தாய்க்குலத் திலகங்களைத் தமிழ்ப் பண்பட்டிலே திளைத்தவர்களாகவே காட்டுகிறார் புலவர். ஒரு நாட்டின் பெருமையும் நாட்டு மக்களின் பெருமையும அந்நாட்டுப் பெண்கள் பெருமையினாலேயே சிறப்புப் பெறும். ஆகையால் அரபுப் பெண்களின் பெண்மை நலங்களைத் தமிழ்ப் பண்பின் பின்னணியில் கண்டு புகழ்ந்து பாடுகின்றார் உமறுப் புலவர்.