பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


கம்பன், சேக்கிழார், கூத்தன், ஜெயங்கொண்டான், வில்லி போன்றார் வாழ்ந்த காலம் வடமொழியுடன் போட்டியிட்டுத் தமிழ் வளர்ந்த காலம் உமறு வாழ்ந்த காலமோ தமிழ் தனது வாழ்வை இழந்திருந்த காலம். ஆம், முன்னரே புகுந்து நிலைத்து விட்டிருந்த வடமொழியுடன் தெலுங்கும், மராத்தியும் தமிழகத்தில் கால் ஊன்றிக் கொண்டிருந்த காலம், சிந்தித்தால் புரியும். உமறுப்புலவர் ஆத்தானக் கவிஞராக விளங்கியது, தமிழ் மன்னன் ஆட்சியில்லை. தெலுங்கு மன்னர் ஆண்ட எட்டயா அரபுச் சிற்றரசில் தான்.

செஞ்சியில் மராத்தியர் ஆளுகை, தஞ்சையிலும், மதுரையிலும் நாயக்க அரசுகள் தென் பாண்டிச் சீமை நெடுகிலும், அதிக அளவில் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு-நாயக்க - சிற்றரசுகள்! பற்றாக்குறைக்கு பரங்கிப் பிரிவினர்கள், தமிழகத்தை ஆளத் தங்களுககுள் போட்டியிட்டுப் போர் விளைவித்துக் கொண்டிருந்த காலம், ஆங்கிலத்தை வரவேற்க, தமிழர்கள் ஆரத்தி ஏந்தி நின்ற காலம்.

இந்தக் காலத் தமிழ்ப்புலவர்கள், தங்களின் ஆற்றலைக் காட்டிட, தல புராணங்கள் பாடிக் கொண்டிருந்தனர். தனம் தருகின்ற குறுநில மன்னர்கள் மீது, காமச்சுவை நிறைந்த உலாக்களும், கோவைகளும், தூதுகளும் பாடிக் கொண்டிருந்தனர்.

தமிழ்த்தாய் தன் மடியின் மிசை, ஒரு செந்தமிழ்க் காப்பியம், புதுமை பழுத்ததாய், பழைய மரபிற்கேற்றதாய் வந்து விழாதா என அன்று ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று, தமிழை வளர்த்துக் கொண்டிருந்தது, சேதுபதிகள் ஆண்டிருந்த சேது நாடு ஒன்றுதான், அதுவும் கூடப் பெருங்காப்பியம் படைத்துக் கொண்டிருக்கவில்லை, புலவர்களை ஆதரித்து, அவர்கள் பாடுகின்ற தனிப்பாடல்களை,