பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீறாவின் காப்பியப் பண்புகள்

மயிலை சீனி வேங்கடசாமி

சீறாப்புராணம் என்னும் இஸ்லாமிய மார்க்க இலக்கியத்தை இயற்றியவர் தமிழ் முஸ்லிமாகிய உமறுப்புலவர். 16ஆம் நூற்றாண்டில் எட்டயபுரத்தில் வாழ்ந்திருந்த உமறுப் புலவர் எட்டயபுரம் கடிகை-முத்துப் புலவரின் மாணவர். இவர் தம்முடைய ஆசிரியரான கடிகை முத்துப் புலவரைப் போலவே சரளமாகக் கவிபாடும் சிறப்புடையவர் இவர் இஸ்லாம் மார்க்க சார்பாக இயற்றின முதுமொழிமாலை, சீறாப்புராணம் என்னும் இரண்டு நூல்கள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளன இவர் இயற்றின வேறு நூல்களும் செய்யுட்களும் கிடைக்கவில்லை. தமிழ் முஸ்லிம் புலவர்கள் தமிழ் மொழிக்கு அளித்த இலக்கியக் காணிக்கைகளில் உமறுப் புலவரின் சீறாப்புராணமும் ஒன்று. இவருடைய கவிதைகளில் தமிழ்மணம் கமழ்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்கள் கைக்கொண்டிருந்த தமிழ் நடையை இவருடைய சீறாப்புராணத்தில் காண்கிறோம். தாய் மொழியான தமிழ் மொழியில் இஸ்லாம் மதச் சார்பாக ஒரு காவியம் இல்லையே என்று சீதக்காதி மரைக்காயர், அபுல் காசீம் மரைக்காயர் போன்ற அக்காலத்துத் தமிழ் முஸ்லிம்கள் கொண்டிருந்த மனக் கவலையைப் போக்க உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றி முஸ்லிம்களை மகிழ்வித்தார். சீதக்காதி மரைக்காயரும், அபுல் காசிம் மரைக்காயரும் உமறுப்புலவருக்கு ஊக்கம் அளித்த பெரியார்களாவர்.

சீதக்காதி நொண்டி நாடகத்தை அரங்கேற்றினபோது அந்தச் சபையில் உமறுப் புலவரும் இருந்தார்.

"சந்த முத்தமிழ் தெரியுங் கல்வித்
தலைவர் மகிழ் உமறுப் புலவருடன்
செந்தமிழ்க் கந்த சுவாமிப் புலவரும்
சீராட்டு நற்றமிழ்ப் பாராட்டவே"