பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


என்று குறிப்பிடுகிறார். இது, கால்களும் கைகளும் அற வீழ்ந்த பின்னும் பல்லாலும் மெய்யாலும் போரிட்டுப் பலரைக் கொன்ற "கும்பகர்ணனின்" இராமாயணப் போர்க்களத்தை நினைவூட்டிக் காணலாம்.

பழக்க வழக்கங்கள்

மேற் சொல்லப்பட்ட பல செய்திகளையன்றி, இன்னும் உமறு கண்ட சீறாவை ஊன்றிப் பார்ப்போமாயின் எண்ணற்ற தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும், பழக்க வழக்கங்களும் அதில் பொதிந்து கிடப்பதை அறிந்து கொள்ள முடியும்,

தமிழ்ப் பெண்கள் தம் உயிரினும் மேலாகக் கற்பினைப் போற்றி வருபவர்கள். இதனை உமறுப்புலவர் வியந்து பாராட்டத் தலைப்படுகிறார். எனவே தான் வயலில், காய்த்துத் தலைசாய்த்து கிடந்த செந்நெல்லின் காட்சியானது,

"ஒருமனைப் பிறந்து ஒருமனை யிடத்தினில் உறைந்து
கருவரத் தரித்து ஈன்று தன்கணவனை இகழாப்
பெருவரம் புறும்பெண் கொடியெனத் தலைசாய்த்துத்"[1]

தோற்றமளித்தது என்று பாடுகிறார்.

செய்நன்றி மறவாச் செந் தமிழ்ப் பண்பாடும் சீறாப் புராணத்தில் போற்றப்படுகிறது. கவிஞர் அரபு நாட்டு வளத்தை குறிப்பிடும்போது மலையெனக் குவித்த நெற் போர்களும், பலவகைச் செருக்குகளும், மலை ஆறு காட்டு வளங்களும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும் அந்த நாடு,

"மன்னவன் வகுதைத்துரை அபுல்காசீம்
வளமனைச் செருக்கும் ஒத்திருக்கும்"[2]

என்கின்றார். நம்மை ஆதரித்தவர் அபுல்காசீம் என்பதால் கவிஞர் செய்ந்நன்றி மறவாது அவரையும் பாடுகிறார்.


  1. 1. சீறா. ஷாம்-நகர் புக்க படலம் 11
  2. 2. சீறா நாட்டுப் படலம் 41