பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அதிசயத் தம்பி


"தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாகப் பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்துவிட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்துவிட்டு வா" என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.

உடனே புராணம் சொல்லும் இடத்திற்குத் தம்பி சென்றான்; அங்கிருந்த கூட்டத்தாரிடம் அண்ணாவுக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரிவித்தான். பிறகு, இரண்டொரு பாடல்களை மிகவும் இனிமையாக, உருக்கமாகப் பாடினன். பாட்டைப் பதம் பிரித்து நன்றாகப் புரியும்படியாக அவன் பாடியது, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அவர்கள், "தம்பி, நீ பாடுவது நன்றாயிருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு நீயே பொருள் சொன்னால் இன்னும் நன்றாயிருக்கும். சொல்வாயா?" என்று கேட்டார்கள்.

அவர்கள் விருப்பப்படியே ஒரு பாடலே எடுத்து முதலில் அவன் பொருள் சொல்ல ஆரம்பித்தான். பெரிய பெரிய அறிஞர்களால்கூட அவ்வளவு நன்றாக விளக்கிக் கூற முடியாது. அப்படி அருமையாகக் கூறினான் அந்தப் பையன்! அவன் சொல்லிக்

கொண்டேயிருந்தான், சபையோர் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள், நேரம் போவதே தெரியவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் பேச்சு முடிந்தது! பேச்சு முடிந்ததும், "தம்பி, இனி பெரியபுராணம் முடியும் வரை நீங்களே வந்து சொல்லுங்கள். அண்ணாவிடம் நாங்கள் சொல்லி விடுகிறோம் என்று கூட்டத்திலிருந்த பலர் கூறினர்கள். கூறியதோடல்ல; மறுநாளே அவனுடைய அண்ணாவைக் கண்டு நடந்ததை அறிவித்தார்கள். அத்துடன் தங்களுடைய விருப்பத்தையும் வெளியிட்டார்கள்.

9