பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்தன. உடனே, மெதுவாக வலது கையால் ஒரு பூச்சி யையும், இடது கையால் மற்றெரு பூச்சியையும் பிடித்துக் கொண்டான். அப்போது இன்னும் ஓர் அழகான பூச்சி உள்ளே இருப்பது தெரிந்தது. அதையும் பிடித்துவிடவேண்டும் என்பது அவனுடைய ஆசை. உடனே, வலது கையிலிருந்த பூச்சி உதடுகளுக்கிடையே வைத்துக் கொண்டு, அந்தப் புதிய பூச்சியைப் பிடிக்கப் போனான். அப்போது அவன் வாயில் வைத்திருந்த பூச்சி, தன் கொடுக்கிலிருந்து ஒரு விதமான திரவத்தை அவன் நாக்கில் கக்கிவிட்டது. அந்தத் திரவம் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்தது. உடனே 'தூ தூ' என்று வாயிலிருந்த பூச்சியை அவன் துப்பி விட்டான். அது 'விர்'ரென்று பறந்தோடி விட்டது.

    இப்படிச் சிறுவயதிலே பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவந்த சிறுவன் தான் ஒரு காலத்தில் உலகம் போற்றும் பெரிய விஞ்ஞானி 

ஆகிவிட்டான். பூச்சி பற்றியும், தாவரங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் அவன் பல புது உண்மைகளைக் கண்டுபிடித்தான். மந்தியிலிருந்து மனிதன் வந்தான்’ என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொன்னவனே அவன்தான்! அவன் பெயர் சார்லஸ் ராபர்ட் டார்வின்.