பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவரில் தள்ளினான்; அவனுடைய மூக்கைச் சுவருடன் வைத்து, 'தேய் தே'யென்று தேய்த்தான்! பாவம், அந்த முரடன் பயந்து ஓடிவிட்டான்.

    முரடனைக் கைச்சண்டையில் தோற்கடித்ததோடு அந்தச் சிறுவன் நிற்கவில்லை. படிப்பிலும் தோற்கடிக்க வேண்டுமென நினைத்தான். முயற்சியுடன் படித்தான். வகுப்பிலே முதல்வனாக மறு பரீட்சையிலே தேறிவிட்டான். அப்புறம், 'வகுப்பிலே கடைசி என்று யாராவது அவனைக் கூப்பிடுவார்களா? இல்லை, அப்படிக் கூப்பிடத்தான் தைரியம் வருமா!
    அந்தச் சிறுவனின் பெயர் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்? அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டு மானால், உடனே நீங்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டும். இங்கிலாந்தில் 'லிங்கன் ஷயர்' என்று ஒரு பிரதேசம் இருக்கிறது. அந்தப் பிரதேசத்தில் "கிராந்தம்’ என்ற ஒர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் உள்ள “கிங்ஸ் ஸ்கூல்" என்ற பள்ளிக்கூடத்து ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டே வந்தால், ஒரு ஜன்னல் சட்டத்திலே அவன் பெயரைக் காணலாம். அங்கே படிக்கும்போது அவனே தன் கைப்பட 'ஐ. நியூட்டன்' என்று அங்கே எழுதி வைத்திருக்கிறான். ஆம், 'புவிஈர்ப்புச் சக்தி' என்று படித்திருப்பீர்களே, அந்த சக்தியைக் கண்டுபிடித்தவன் அதே ஐசக் கியூட்டன்தான்! .