பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பிறந்த நாள்
    அந்தப் பையனுடைய அப்பா ஒரு பெரிய வக்கீல். நல்ல பணக்காரர். மிகுந்த செல்வாக்கு உடையவர். அவரும் அவருடைய மனைவியும் பிள்ளேயை மிகவும் செல்வமாக வளர்த்து வந்தார்கள்.
    தீபாவளி, கோகுலாஷ்டமி, தசரா-இப்படிப்பட்ட பண்டிகைகள் வந்துவிட்டால், அந்தப் பையனுக்குத் தலை கால் தெரியாது. ஆடிப் பாடி மகிழ்வான். ஆனாலும் அவற்றை யெல்லாம்விட மிகவும் பிரியமான நாள் ஒன்று அவனுக்கு உண்டு. அதுதான் அவனுடைய பிறந்த நாள்!
    பிறந்த நாளன்று அவன் சரிகை வேட்டி கட்டிக் கொள்வான். பட்டுச் சொக்காய் போட்டுக்கொள்வான். அன்று அவனுடைய வீட்டுக்குப் பெரிய பெரிய மனிதர்கள் எல்லாரும் வருவார்கள். அவர்கள் வரும்போது வெறும் கையுடனா வருவார்கள்? நல்ல நல்ல பரிசுகளெல்லாம் கொண்டு வருவார்கள். அவற்றை அவனிடம் கொடுத்து அவனுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்துவார்கள். அவன், இந்த விழாவில் நான்தான் கதாநாயகன் என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படுவான்.
    அடடே, முக்கியமாக நடக்கும் ஒன்றைக் கூற மறந்து விட்டேனே! அன்று அதிகாலையில் ஒரு பெரிய தராசில், ஒரு தட்டில் அந்தப் பையனை உட்கார வைப்பார்கள்; மற்ருெரு தட்டில் கோதுமை முதலிய தானியங்களை வைப்பார்கள். தானியங்களின் எடை அவனுடைய எடைக்குச் சரியாக வரும்வரை வைத்துக் கொண்டே யிருப்பார்கள். பிறகு, தராசில் வைத்த தானியங்களை எடுத்து ஏழை, எளியவர் களுக்குக் கொடுப்பார்கள். 

அன்று முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். பெரிய விருந்தும் நடக்கும். இப்படியெல்லாம் குதூகலமாக

43