பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

5



1. தீர்மானம்

ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத தந்தையும் மகனும் இருந்தனர். ஒரு நாள் தந்தை விருந்துக்கு ஒருவரை அழைத்திருந்தார். எனவே விருந்தினர்காகக் கறிவாங்கி வரும்படி மகனைப் பக்கத்துப் பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார். கறியினை வாங்கி வரும்போது பட்டணத்து வாயிலில் தன்னை நோக்கி ஒருவர் நடந்து வருவதைக் கவனித்தான் மகன். எதிரும் புதிருமாக வந்த அவர்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் வழிவிட்டு விலகாமல் அந்தக் குறுகிய வாசலில் நெடுநேரம் நின்றனர்.

பட்டணம் சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராத மகனைத் தேடித் தந்தை வந்தார். மகனைப் பட்டணத்து வாயிலில் கண்டார் தந்தை. கண்டதும் சொன்னார். “கறியை எடுத்துக் கொண்டு நீ வீட்டிற்குபோய் விருந்தினரோடு இரு. உனக்குப் பதிலாக இந்த மனிதனை நான் இங்கு எதிர்த்து நிற்கிறேன்”.

2. திடீர்ப் பணக்காரன்

வறியவன் ஒருவன் பணம் படைத்தவன் ஆனான். வந்த வாழ்வில் முந்தியதை மறந்தான். ஒரு நாள் காலைத் தன் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, வீட்டிற்குள் சலிப்போடு நுழைந்தான். சலிப்புக்குக் காரணம் கேட்டாள் மனைவி. “தோட்டத்திலுள்ள மலர்களைப் பார்வையிடும்போது, செம் மலரிலிருந்து ஒரு பனித்துளிப்பட்டு நனைந்துவிட்டேன். பனிக் காய்ச்சல் வந்து விட்க்கூடாது உடனே மருத்துவரைக் கூப்பிடு” என்றான்