பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சிறந்த சொற்பொழிவுகள்

15. மூட நம்பிக்கை

ஜி. டி. நாயுடு (23. 1. 1971)

பெருமதிப்பிற்குரிய தலைவர் பெரியார் அவர்களே ! அன்பு நண்பர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! வருங்கால உலகத்தைச் சீரும், சிறப்பும் மிக்கதாகச் செய்யக் காத்திருக்கும் நல் இளைஞர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.

நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்லன். இதனால்தான் எந்தக் கட்சிக்காரர் அழைத்தாலும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு என் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மைகளைத் துணிச்சலுடன் கூறிவருகின்றேன். இவ்வாறு உண்மையை வெளிப்படையாகப் பேசுவது அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்குப் பிடிப்பதில்லை. காரணம், எங்கே அவர்களுடைய தவறுகளையும் எடுத்து வெளியே சொல்லிவிடுவேனோ என்று பயந்து கொள்கிறார்கள்.

பெரு மதிப்பிற்குரிய பெரியார் அவர்கள் தலைமையிலே மூட நம்பிக்கைகள் ஒழிப்பு மாநாடு நடத்துவது பற்றிப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் அவர்கள் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக அன்றும் இன்றும் அயராது இரவு பகல் பாராது ஒயாது உழைத்துக்கொண்டு வருகிறார். அவருடைய பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய பணியால் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி - ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை யாரும், எவரும் மறுக்க முடியாது.

பெரியார் அவர்கள் எப்போதுமே ஆட்சியில் இருக்கும் கட்சியை ஆதரித்துக் கொண்டிருப்பதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. ஆட்சியில் உள்ளவர்களை அனுசரித்துப் போய் அதன் மூலமாக அவர் சாதித்துக்கொள்ள வேண்டியவைகள் - பெறவேண்டிய சலுகைகள், லைசென்சுகள், கோட்டா முறைகள் எவையும் கிடையா.

அவர் எதற்காக ஆட்சியில் உள்ளவர்களை அனுசரித்துப் போகின்றார் என்றால், அவர்கள் எப்படியாவது மூட நம்பிக்கைகளை