பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 111

ஒழித்தால் சரி என்பதற்காகத்தான். ஆட்சியில் உள்ளவர்களால்தாம் சட்டங்களைப் போட்டு மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியும் என்ற காரணம் பற்றியே அவ்வப்போது ஆட்சிக்கு வருகின்றவர்களை ஆதரித்துக்கொண்டு வருகிறார்.

அப்படி இருந்தும் ஆட்சிக்கு வருகின்றவர்கள், இவர் எதிர்பார்க்கின்றபடி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு வேகமாகச் செயல்படுவதில்லை. அவர்களும் சில வேலைகளைச் செய்கிறார்கள். பணம் சேரத் தொடங்கியதும் பயம் வந்து விடுகிறது. பிறகு அவர்களும் மூட நம்பிக்கை உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறு அவர்களுக்குப் பணம் சேர்ந்து அவர்களும் பல மூடப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதற்குப் பெரியார் எந்த வகையில் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியும்?

நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாமர மக்களும் படித்தவர்களும் மூட நம்பிக்கைகளில் மூழ்கித் தங்களுடைய பொன்னான நேரத்தையும், சக்தியையும், செல்வத்தையும் வீண் விரையம் செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களைச் சரியான பாதைக்குத் திருப்பப் பெரியார் அவர்கள் பெரு முயற்சி செய்து கொண்டு வருகிறார். அவருடைய முயற்சிக்கு நாமும் உதவியாக இருந்து மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டியது அவசியமாகும். அதுவும் அவசரமான செயல் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். .

நாம் கொண்டுள்ள நம்பிக்கையை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று சரியான நம்பிக்கை, மற்றொன்று மூட நம்பிக்கை. உதாரணமாகப் புயல் அடிக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பலத்த காற்றின் வேகத்தால் புயல் அடிக்கிறது என்பது சரியான நம்பிக்கை. வாயுதேவனின் கோபத்தால் புயல் அடிக்கிறது என்பது மூட நம்பிக்கை.

நீராவியானது குளிர்ச்சி பட்டதும் மழை பெய்கிறது என்பது சரியான நம்பிக்கை. வருண பகவானால் மழை பெய்கிறதென்று சொல்வது மூட நம்பிக்கை. * . . . . . . . .

காற்றில்லா வேளையில் புயல் அடிப்பதில்லை. காற்று அதிகமாக அடிக்கவே புயலாக மாறுகிறது என்று அதன் காரண, காரியங்களை அறிந்து கொள்வதே அறிவு. அதை விட்டுவிட்டு வாயு தேவனால்தான் புயல் உண்டாகிறது என்று நம்பியும், பேசியும் வருவது மூட நம்பிக்கை. இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளால் உண்மை மறைக்கப்படுகிறது.