பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 121

சோதிடங்களில் ஒரு தேதியில் மரணம் வரும் என்று சொல்லுகிறார்கள். இறக்காமல் தப்பித்துவிட்டால், அது எதோ ஒரு கடவுளைக் கும் பிட்டதால் தப்பித்துக் கொண்டார்கள் என்று சொல்லுகிறார்கள். எதிர்பாராத விதமாகத் திடீர் என்று செத்துப்போய்விட்டால், அவனுக்கு எழுதி வைத்த விதி அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் போய் விதியைப் படித்துப் பார்த்துவிட்டு வந்தவர்கள் போலவே சொல்லுகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் சாதகம் எழுதுகின்றவர்கள் பல கோடிக் கணக்காக இருக்கும் கொசு, எறும்பு, பூச்சிகளுக்கு என்ன சாதகம் எழுத முடியும்? அவ்விதம் எழுதினாலும் அவைகள் சோதிடத்தை நம்புவதில்லை. ஆனால் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் முட்டாள்கள் நம்புகிறார்கள். -

பெருமதிப்பிற்குரிய பெரியார் அவர்கள் இவைகளைப் பற்றிப் பல ஆண்டுகளாகப் பல விதங்களில் சொல்லிக்கொண்டுதான் வருகிறார். ஆனால் மூடப்பழக்க வழக்கங்கள் குறைந்த பாடில்லை. இனி என்ன செய்யவேண்டுமென்றால், அரசாங்கமே ஒரு சட்டம் இயற்றித்தான் இவைகளை ஒழிக்கவேண்டும். வேறு எந்த வழியிலும் ஒழிக்கமுடியாது.

முன்பு காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோது ரீரங்கநாதரையும், வேங்கடேசப் பெருமாளையும், மயிலாப்பூர் சாமியையும், காந்தி, நேரு போன்ற தலைவர்களையும் கும்பிட்டுக்கொண்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் கடவுள் இல்லை என்றும், கடவுளின் ஆபாசக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களும் ஆட்சியில் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் மாறிப்போய் விட்டார்கள்.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க எந்தச் சட்டமும் கொண்டுவரவில்லை. அவர்களே பல நிகழ்ச்சிகளில் மூடநம்பிக்கைகளைப் புகுத்திக்கொண்டு வருகிறார்கள். இனி, மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர்களையும் நம்பக்கூடாது. ராணுவம் அல்லது கம்யூனிசம் வரவேண்டும். வந்து, பெரியார் அவர்கள் சொல்லுகிறபடி, கோவில்களையும் மசூதிகளையும், சர்ச்சுகளையும் இடித்துத் தள்ளினால் தான் மூடநம்பிக்கைகளை ஒழிக்கமுடியும் என்று நம்புகிறேன். -