பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சிறந்த சொற்பொழிவுகள்

இந்த மூடநம்பிக்கைகளைப் பற்றித் தலைமுறை தலைமுறையாக அநேக ஆயிரம் ஆண்டுகளாகத் தொடங்கி வந்ததைச் சரியான உதாரணங்களோடு நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் என்னால் சொல்ல முடியும். பெரியார் அவர்களால் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.

பெரியாருடைய சீடர்கள் என்று சொல்லக் கூடியவர்களே கோவிலுக்குப் போய்க் கடவுளை வாரத்திற்கு ஒரு தடவையாவது அல்லது மாதத்திற்கு ஒரு தடவையாவது கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். இதற்கு என்ன சொல்வது? 1940ஆம் ஆண்டிலேயே சோதிடத்தைப் படித்த கதையைச் சொல்லுவதானால் மிக நீண்ட நேரமாகும். சோதிடத்தில் எல்லோரையும் இல்லாவிட்டாலும் அநேகரையாவது சொல்லமுடியும்.

சோதிடத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பே கிடையாது என்று நிரூபிக்க முடியும். மூட நம்பிக்கை உள்ளவர்கள் இருப்பதால்தான் சோதிடம் உண்மை என்று நம்பிக்கொண்டு செத்துப் போகிறார்கள். இந்த விஷயங்களை நான் 1948ஆம் ஆண்டில் நடந்த அகில உலகத் தமிழர் மாநாட்டிலேயே சொல்லியுள்ளேன். பெரியார் அவர்கள் அவற்றை மொழிபெயர்த்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். இப்போது சொன்ன இதே கருத்துக்களை 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் இந்தப் பெரியார் தலைமையிலேயே நடந்த ஒரு கூட்டத்தில் மிக விளக்கமாகச் சொல்லியுள்ளேன். இங்கு இன்னும் அநேகம் பேர்கள் பேசவேண்டியிருப்பதால் நான் இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

(சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் - தொழில் விஞ்ஞானி திரு. ஜி.டி.நாயுடு)