பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நமச்சிவாய முதலியார் 43

உண்மைகளையும் நடத்தி யருளிய அற்புதங்களையும் என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் எடுத்துக் கூறி என் முன்னுரையினை ஒருவாறு முடித்துக் கொள்ள முன்னுவேனாக,

திருவருட் செல்வர் காள், நந்தம் வள்ளலாரது அருமை பெருமைகளைக் கூறுங்கால் எவ்வகையிலேனுங் குற்றங் குறைகள் காணுமாயின் அவற்றைப் பொறுத்தருளுமாறு உங்கள் திருமுன் விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றேன்.

பெரியீர், நந்தம் வள்ளற் பெருமானைக் கண்ணாரக் கண்டு வாயார வாழத்திய பெரும் பேற்றைப் பெற்ற புண்ணிய சீலரிற் பலர் இங்குக் குழுமியிருத்தல் கூடும். அப்பெரியார் காலத்திற்றானே நிகழ்ந்த அற்புதங்களைக் கண்டார் வாய்க் கேட்டு உண்மையுணர்ந்து உய்யுந் திறனடைந்த அன்பரிற் பலர் இங்கே அடைந்திருத்தல் கூடும்; அம்மாதவப் பெருந்தகையை உபாசனா மூர்த்தியாகக் கொண்டு செய்தவம் கைவரப் பெற்றுத் திகழுந் தொண்டரிற் பல்லோார் ஈண்டுத் தோன்றியிருத்தல் கூடும். அத்தகைய அன்பர்கட்கெல்லாம் இவ்வெளியேன் கூறும் புன்மொழிகள் ஒரு பொருளாகத் தோற்றுதல் எங்ங்ணம்.

அன்பர்காள், இன்று இங்கே கூடியுள்ள ஆயிரக் கணக்கான அன்பர்களின் திருவுருவப் பொலிவையும் சிவஞானத் தெளிவையும் தம்மை மறந்த தன்மையையும், தத்போதம் அழிந்த தகைமையையும் பந்தமகன்ற பான்மையையும் சமரசஞானச் சார்பையும் உண்மையுணர்ந்த உவகையையும் நாம் கண்ணாரக் காணும் இக்காட்சி யொன்றே நம் வள்ளலார் மாட்சிமைகளை நமக்கு நன்கு விளக்குமன்றே!

நம் வள்ளற் பெருமான் சுமார் நூறுயாண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1823 இல்) சென்னையிற் றோன்றி நல்லறிவும் நல்லொழுக்கமும் உடன் வளர வளர்ந்து திருவருள் ஞானங் கைவரப் பெற்று விளங்கினர்.

இப்பெரியார் வரலாறு அருட்பா முதலியவற்றைத் தொகுத்து, உண்மை நேயம் வாய்ந்த காரணப்பட்டுக் கந்தசாமிப் பிள்ளையவர்கள், மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் ஆகிய இவ்விருவரது துணையைக் கொண்டு, இராமச்சந்திரபுரம் ரீமான் முத்தையா செட்டியார் அவர்கள். அழகுறப் பதித்து பலர்க்கும் இலவசமாக உபகரித்தனர். அதன் முகத்தில் நந்தம் வள்ளலாரது வரலாறுகளும் அவர் செய்தருளிய அற்புதங்களும் முறையே அமைக்கப் பெற்றுள்ளன; ஆதலின், அவற்றை அடியேன் ஈண்டு விரித்துரைத்தல் மிகையாகும்; ஆண்டுக் கண்டுகொள்க.